உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வும் ஆட்சியில் இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வந்திருந்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற இடங்களில் கணிசமான தொகுதிகளை பா.ஜ.க இழக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில், அங்கு பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில், நான்கு மாதங்களில் மூன்று முதல்வர்கள் மாற்றப்பட்ட விவகாரம், பா.ஜ.க-வின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல வியூகங்களை பா.ஜ.க வகுத்துள்ளது. இந்த நிலையில்தான், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்துத்துவா அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
ஹரித்துவாரில் `தர்ம சன்சத்’ (மத நாடாளுமன்றம்) என்ற பெயரில் இந்துத்துவா அமைப்புகளால் டிசம்பர் 17 - 19 தேதிகளில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வலதுசாரி செயற்பாட்டாளர்கள், இந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட அடிப்படைவாதிகள், மதத் தலைவர்கள் என ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மூன்று நாள்கள் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பூட்டுகிற பேச்சுகளுக்கும், வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகளுக்கும் மிக மோசமான அளவுக்கு இருந்தது என்று செய்திகள் வெளியாகின.
பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான அஸ்வினி உபாத்யாயா, பா.ஜ.க-வின் மகளிர் அமைப்பைச் சேர்ந்த உதிதா தியாகி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அஸ்வினி உபாத்யாயா, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கோஷங்கள் எழுப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக ஏற்கெனவே ஒரு முறை கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து ரக்ஷா சேனா என்ற வலதுசாரி அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இத்தகைய கருத்துகளைப் பேசியிருக்கும் அந்த நபர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதேபோல, பா.ஜ.க-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரத் சிங் ராவத் மற்றும் அந்த மாநில உயர் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் ஆகியோருடன் பிரபோதானந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
இந்துத்துவாவையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக இந்துக்கள் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று 2017-ம் ஆண்டும், ‘லவ் ஜிகாத்’ பற்றி 2018-ம் ஆண்டும் அவர் பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.
Also Read: உ.பி தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் அகிலேஷ் யாதவ்... யோகிக்காக பா.ஜ.க-வின் பிளான் என்ன?!
தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பேசப்பட்ட பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. அந்த பேச்சுகளுக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன. அதையடுத்து, உத்தரகாண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிரிவு 153 ஏ (மதத்தின் அடிப்படையில் இரு தரப்பினருக்கு இடையே பகைமையை உருவாக்குதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில டி.ஜி.பி அசோக் குமார் தெரிவித்தார். இந்த பேச்சுகளுக்காக, வாசீம் ரிஸ்வி உள்பட பலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாசீம் ரிஸ்வி இஸ்லாமியராக இருந்து இந்துவாக மதம் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, ``அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க-வினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா அங்கு சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சியின் இறுதியில்தான் அங்கு சென்றேன் என்றும், அதற்கு முன்பாக அங்கு என்ன பேசப்பட்டது என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நமக்கு கிடைத்த காணொலிகளைப் பார்த்தவரையில், இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் உறுதிமொழி எடுக்கிறார்கள். அவர்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு, இந்து மதம், இந்து ராஷ்டிரம் காப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக எந்தத் தியாகத்தையும் நாம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் குலைப்பதற்கு யாரேனும் திட்டமிட்டால் என்று பொருள்பட அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனாலும், வன்முறை எந்த ரூபத்திலும் நாம் ஏற்க முடியாது” என்றார்.
இந்த பேச்சுகளால் வன்முறையோ, கொலைச் சம்பவங்களோ நடக்கவில்லை. எனவே, அங்கு பேசியவர்களுக்கு எதிராக ‘உபா’ சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று டி.ஜி.பி கூறியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் வாள்களையும் சூலாயுதங்களையும் சுற்றியது பற்றி கூறிய டி.ஜி.பி., அது வழக்கமான ஒன்றுதான் என்றும், ஆயுதங்கள் எதையும் அவர்கள் வாங்கவில்லை, ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்!
from தேசிய செய்திகள்
0 Comments