Vijay: "படங்களில் மீனவர்களைக் காப்பது போல் நடித்துவிட்டு, நிஜத்தில்..."- நயினார் நாகேந்திரன் காட்டம்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும். இதற்காக நாங்கள் முழு முயற்சியுடன் பாடுபடுவோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் நடமாடும் இடம் என்பதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், வரைபடம் (Plan), கட்டிடக் கலைஞர் (Architect) விவரங்கள் மற்றும் டெண்டர் எதுவும் அறிவிக்கப்படாமல், வெறும் ரூ1,200 கோடி ரூபாய் தொகையை மட்டும் அரசு அறிவித்துள்ளது. டெண்டர் கோராமலேயே நிதியை ஒதுக்குவது ஊழலின் தொடக்கமாகும்.

ஊழலற்ற ஆட்சி என்று கூறிக்கொண்டு, தற்போதைய அரசு முதலமைச்சரின் அறையிலிருந்தே ஊழலைத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் அறையைப் புதுப்பிக்க டெண்டர் விடாமல் 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகும் நிலையில், இந்தச் செலவு தேவையா என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல், மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்கென 5 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. சென்னையிலிருந்தே பொத்தானை அழுத்தி அணையைத் திறக்க முடியும் எனும் சூழலில், இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்?

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

திரைப்படங்களில் மீனவர்களைக் காப்பாற்றுவது போல் நடித்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காலி செய்ய அரசு முயல்வது நியாயமற்றது. முதலமைச்சரின் லண்டன் பயணம் எதற்காக என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. சென்னையிலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தனம் கிண்டியிலேயே அசோக் லேலண்ட் நிறுவனம் இருக்கும்போது, லண்டனுக்குச் சென்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தொழில்துறை அமைச்சரோ அல்லது செயலாளர்களோ உடன் செல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த லண்டன் பயணத்தின் மூலம் என்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்பதை ஊடகங்கள்தான், மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்." என்றார்.



from India News https://ift.tt/kXcChTE

Post a Comment

0 Comments