சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந் தேதி நள்ளிரவிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாணவர்கள் போராட்டம்
சென்னை மாணவர்கள் போராட்டம்

சென்னையில் எழும்பூர் பகுதியில் இரவில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.

இதேபோல, மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை அருகே காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பங்கேற்றவர்களை விரட்டி விரட்டி வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய சென்னை SFI மாவட்டச் செயலாளர் தமிழைத் தொடர்புகொண்டு போராட்டக்களத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேசினோம்.

அவர், ``நீட் தேர்வு விவகாரத்திற்கு எதிராக DYFI, SFI சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பிற மாநிலங்களின் நகரங்களில் காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தை மட்டும் தொடங்கினோம்.

SFI மாவட்டச் செயலாளர் தமிழ்
SFI மாவட்டச் செயலாளர் தமிழ்

மாலை 5:45 மணியளவில் தொடங்கிய இப்போராட்டத்தில், இரவு 8 மணிக்கு முன்பாக காவல்துறையினர் மாணவர்களைக் கைது செய்ய முயன்றனர். அப்போது காவல்துறையினர் மிகவும் முரட்டுத்தனமான முறையில் நடந்து கொண்டனர். பெண் தோழர்களின் ஆடைகளை இழுத்துத் தாக்கியும், ஒரு சிலர் அடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தத் தள்ளுமுள்ளுவில் இரண்டு பெண் தோழர்களின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு தோழர் மயக்கமடைந்தார். கைது செய்யப்பட்ட மாணவர்கள் எழும்பூரில் உள்ள சிந்து சதா மண்டபத்தில் வைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மேல்தான் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையைத் தவிர்த்து மதுரை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும் காவல்துறையினர் இத்தகைய கடுமையான முறைகளைக் கையாண்டு போராட்டத்தைக் கலைத்துள்ளனர். இருப்பினும், காவல்துறையின் இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை மீண்டும் காத்திருப்புப் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டம் கலைப்பு, கைது நடவடிக்கை போன்றவைக்கு எதிராக தவெக கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

சென்னை மாணவர்கள் போராட்டம்
சென்னை மாணவர்கள் போராட்டம்

சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன், ``டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீட்டை ரத்து செய்யக்கோரியும் போராடிய SFI, DYFI தோழர்களைக் கைது செய்த தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

'கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லையா?' எனத் தேசியத் தேர்வு முகமையைப் (NTA) பார்த்து உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வியை தமிழக காவல்துறையைப் பார்த்துக் கேட்கிறோம். அறவழியில் போராடும் இளைஞர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை என்ன? போராட்டமே ஜனநாயகத்தின் உயிர் பகுதி" என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தில், "CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுவோரைக் கைது செய்வது என்பது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இந்த அடக்குமுறையை அரசு உடனே நிறுத்தி, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாணவர்கள் போராட்டம்
சென்னை மாணவர்கள் போராட்டம்

திமுக எம்.பி. கனிமொழி, "நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசைப் பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில்தான், இன்று இந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதா தவெக அரசு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



from India News https://ift.tt/f0L1xCB

Post a Comment

0 Comments