''தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது'' என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரே நாளில் த.வெ.க ஆட்சியை காட்டமாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியையும் விமர்சித்து அறிக்கை வெளியிடக் காரணம் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று ஒருவார காலம்தான் ஆகிறது. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக நேற்று மாலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

முதல்வர் விஜய்

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், ``சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, மாலை ஆறு மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி ``தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்'' என த.வெ.கவைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்..,

எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கோபத்துக்குக் காரணம் என்ன?..,அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்..,

``சசிகலா, தினகரன், மூன்று முறை அம்மாவால் முதல்வராக்கப்பட்ட ஓ.பி.எஸ்,. தன்னை அரசியலில் வளர்த்துவிட்டு செங்கோட்டையன் என அனைவரையும் ஓரம்கட்டியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் கட்சிக்குள் பல்வேறு களேபரங்களை உண்டாக்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி

அதற்கு, விஜயின் வருகைதான் காரணம் என்பதால்தான் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதுகூட உடனடியாக அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அடுத்து, விஜய் பெயரை முன்வைத்து கட்சிக்குள் கலகம் எழுந்தபோது அவரின் கோபம் இன்னமுமே அதிகமானது. தொடர்ந்து, சட்டமன்றத்தில் விஜயை ஆதரித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நின்றது மட்டுமல்லாமல், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை விஜய் நேரில் சென்று சந்தித்தபோது உடைந்தேபோனார் எடப்பாடியார் இப்போது, சி.வி.சண்முகம் தரப்பு போட்டி பொதுக்குழுவை நடத்த, கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல் கையெழுத்தை வாங்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

இன்று மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்து, ஆதரவாக இல்லாமல் இருப்பவர்களை கட்சியை விட்டு நீக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

செம்மலை கட்சியை விட்டு விலகியிருக்கிறார். சொந்த மாவட்டத்திலேயே பதவியை விட்டு விலகவேண்டும் என போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். பல நிர்வாகிகள் இன்னமும் விஜயை ஆதரிக்க, சி.வி.சண்முகம் பக்கம் தாவ தயாராக இருப்பதோடு, தொலைபேசியில் அழைத்தால் போனை எடுக்காமல் இருப்பதாலும், இப்படியொரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி. த.வெ.க ஆட்சி நிலைக்காது. அதை நம்பிப் போகாதீர்கள் எனவும் அறைகூவல் விடுத்திருக்கிறார். முக்கிய நிர்வாகிகளிடம் பேசும்போது, இனிமேலும் விட்டா சரியா வராதுப்பா என கறாராகப் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள்.



from India News https://ift.tt/EfQrH75