கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த தலைமை மாற்றத்திற்கான அதிகாரப் போட்டி தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லி இந்திரா பவனில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த முக்கியக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையாவிடம், ``அடுத்தவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்" என்று மிகத் தெளிவாகவும், கனிவாகவும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த சித்தராமையா, கட்சியின் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறியதுடன், முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை (28-ம் தேதி) தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கட்சிக்கூட்டணிக்குள் எழுந்துள்ள அழுத்தங்கள் மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில், புதிய முகத்திற்கு வழிவிடுமாறு சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
இந்த அதிகார மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சித்தராமையாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மிக உயரிய அமைப்பான 'காங்கிரஸ் செயற்குழுவில்' இடம் தருவதாக மேலிடம் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த ஆஃபரை கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதி சித்தராமையா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தருணத்தில் தனக்கு டெல்லி அரசியலுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை அவர் தலைமைக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதில் இருந்தே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே சுழற்சி முறையில் முதல்வர் பதவி கிர்ந்துகொள்ளப்படும் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
கடந்த சில மாதங்களாகவே கர்நாடக காங்கிரஸில் உள்விவகாரப் பூசல்கள் புகைந்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகள் தற்போது இந்த அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
இதற்கிடையில், முதல்வர் சித்தராமையாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. 'டெல்லியில் நடந்த உயர்மட்டக் கூட்டம் வரவிருக்கும் மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவை தேர்தல்கள் குறித்து மட்டுமே விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்டது' என்று கட்சி விளக்கம் அளித்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், "ஊடகங்களில் வெளியாகும் ஊகங்கள் எதுவும் உண்மையில்லை; இன்றைய கூட்டம் தேர்தல்கள் சார்ந்தது மட்டுமே" என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை மறுத்த போதிலும், டெல்லி வட்டாரங்களின் நகர்வுகள் கர்நாடக அரசியலில் மிகப்பெரிய புயல் வீசுவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
from India News https://ift.tt/0c4evOw
0 Comments