Iran: "கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" - இஸ்ரேல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா இந்தப் போர்நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறது. ஆனால் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதால் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுத்து வருகிறது.

ஈரானில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் துறைமுகத்திற்குள் எந்தக் கப்பலும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அதோடு அந்த வழியாக வரும் கப்பல்களைத் தாக்கி வருகிறது.

போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்க தயாராகி வருகிறது. கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க துடித்துக்கொண்டிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில், ''ஈரானுடனான போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது. தாக்குதலைத் தீவிரப்படுத்த அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது. இதற்காக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை முழு அளவில் தயாராக இருக்கிறது.

தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தையும் இறுதி செய்துவிட்டோம். இஸ்ரேலை அழித்தொழிக்க நினைக்கும் திட்டத்தின் சூத்திரதாரியாகவும், ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைமைப் பொறுப்பைத் தொடர்பவர்களாகவும் திகழும் கமேனி குடும்பத்தை முழுமையாக ஒழித்துக்கட்ட, நாங்கள் அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஈரானை மீண்டும் இருளுக்கும் கற்காலத்திற்கும் தள்ளும் வகையில், அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின் நிலையங்களை நாங்கள் தகர்த்தெறிவோம்.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்போம். இம்முறை தாக்குதல் மீண்டும் தொடரும்போது, ​​அது முற்றிலும் மாறுபட்டதாகவும், உயிரைப் பறிக்கக்கூடியதாகவும் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய மத உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தாப் கமேனி இப்போரில் காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட இருக்கிறது. முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசுவதிலும் சிக்கல் இருக்கிறது.

முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. காயம் அடைந்த காலில் மூன்று முறை ஆப்ரேசன் செய்யப்பட்டுள்ளது. கையிலும் ஆப்ரேசன் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தே தாக்குதலில் செயலிழந்த உடல் உறுப்புகள் மீண்டும் படிப்படியாகச் செயல்பட ஆரம்பித்து வருகின்றன என்று ஈரானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஈரானின் முக்கிய முடிவுகளை ராணுவ ஜெனரல்கள் அடங்கிய உயர்மட்டக்குழு எடுத்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலியக் கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களைத் தடுக்க, மூத்த ஈரானிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் மொஜ்தபாவைச் சென்று பார்வையிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். அவரது சிகிச்சையைத் தற்போது சுகாதார அமைச்சரும் ஈரானிய ஜனாதிபதியுமான மசூத் பெசெஷ்கியன் மேற்பார்வையிட்டு வருகிறார். அவர் இதய அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

ஈரான் மீது அமெரிக்க கூட்டுப்படை மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து காலி செய்யும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவும் வளைகுடா பகுதிக்குக் கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் மீண்டும் போருக்குத் தயாராவதற்காகத்தான் இந்தப் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.



from India News https://ift.tt/1YzrMpV

Post a Comment

0 Comments