அ.தி.மு.க- வில் இன்று இணையும் காளியம்மாள்? என்ன பொறுப்பு?

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்குக் கட்சியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கடந்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடிப்படையில் சமூகச் செயற்பாட்டாளரான காளியம்மாள், 2018 காலகட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில கலந்துகொண்டார்.

அப்போது அவருடைய பேச்சைக்கேட்ட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான, மறைந்த சாகுல் ஹமீது அவரை நாம் தமிழர் கட்சிக்குக் கொண்டு வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவருடைய பிரசாரம் கட்சி வேறுபாடுகளைத்தாண்டி பலரின் பாராட்டைப் பெற்றது. தேர்தல் முடிவுகளில் அறுபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றார். தொடர்ந்து, 2021 தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 15000 வாக்குகளைப் பெற்றார்.

2024 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். பின்னர், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறினார். ஆனால், வெளியில் வந்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் சீமான் குறித்தும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

தொடர்ந்து, அவருடன், தி.மு.க, தவெக, தவாக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகின. மீனவர் நலன் சார்ந்து தனியாக ஒரு அமைப்பைத் தொடங்கப்போகிறார் என்கிற தகவல்களும் வெளியாகின.

இந்தநிலையில்,தற்போது அவர் அ.தி.மு.கவில் இணைவது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஓ.பி.எஸ் மணியன் ஆதரவோடு அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு.அ.தி.மு.கவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தம்பிதுரை கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, 2026 சட்டமன்றத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கூட்டணியில் பா.ம.கவுக்கு அந்தத் தொகுதி செல்லாத பட்சத்தில், காளியம்மாளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

எம்.எல்.ஏ சீட்டு கொடுக்கமுடியாத பட்சத்தில், ஆட்சிக்கு வந்தால் மீனவர் நல வாரியம் போன்ற ஏதாவது வாரியத் தலைவர் பதவி வழங்கப்படும் என அ.தி.மு.க தலைமை உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் பி.காம் வரை படித்திருக்கிறார். அ.தி.மு.க பின்னணி கொண்டது அவருடைய குடும்பம். 2004 சுனாமிக்குப் பிறகு கடலோர மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கடலோரப் பெண்களின் பிரச்னைகளுக்காக சட்ட உதவி மையத்திலும் பணியாற்றியிருக்கிறார்.



from India News https://ift.tt/NcFQf0v

Post a Comment

0 Comments