வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நேற்று கைப்பற்றியது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு.

அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை தனது ட்ரூத் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதில் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருக்கிறார். அவரை அமெரிக்காவின் USS IWO Jima என்கிற போர்க்கப்பலில் வைத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டே அதிபரை சிறைப்பிடித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.

இனி வெனிசுலாவை யார் ஆட்சி செய்வார்கள்?

இந்தச் சம்பவம் குறித்து பேச நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார் ட்ரம்ப். அப்போது அவர் பேசியதாவது...

"வெனிசுலாவில் அடுத்து பாதுகாப்பான ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில், அந்த நாட்டில் அமெரிக்கா ஆட்சி நடத்தும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்குச் சென்று அங்கு உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

வெனிசுலா மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

வெனிசுலா மிகுந்த எண்ணெய் வளம் உள்ள ஒரு நாடு ஆகும். அங்கே ஒவ்வொரு நாளும் மில்லியன் பேரல் கணக்கான எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா.

எண்ணெய் மூலம் பெறும் பணத்தை வெனிசுலா போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல் மற்றும் கடத்தல்களுக்குப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

நியூயார்க்கில் மதுரோ

தற்போது மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன.

மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு அவரது நட்பு நாடுகளான ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

நிக்கோலஸ் மதுரோ ||Nicolas Maduro
நிக்கோலஸ் மதுரோ ||Nicolas Maduro

கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

இதைத் தாண்டி, ட்ரம்பின் இந்தச் செய்கைக்கு அமெரிக்காவில் இருந்தே கடும் குரல் ஒன்று கிளம்பியுள்ளது. அது அதிபர் தேர்தலில் இவருடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கமலா ஹாரிஸ் உடையது ஆகும்.

அவர், "மதுரோ கொடூர மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சர்வாதிகாரியாகவே இருக்கட்டும். ஆனால், அது ட்ரம்பின் நடவடிக்கையை நியாயப்படுத்தாது.

இது அமெரிக்க குடும்பங்களைத்தான் சிக்கலில் தள்ளும். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை.

இந்தச் சம்பவம் போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டது அல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது ஆகும்.

ட்ரம்பின் இந்தச் செய்கை அமெரிக்க ராணுவ வீரர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. அடுத்ததாக, பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் வீணாகி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகி உள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/2ZSmXgH

Post a Comment

0 Comments