"24 மணி நேரமும் மது விற்பனையாவதற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான்" - நயினார் நாகேந்திரன் காட்டம்

தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், 40-வது நாளாக நேற்று கரூருக்கு வருகை தந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கரூர் 80 அடி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார்.

bjp meeting
bjp meeting

"சேரர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த ஊர் கருவூர். சித்தர்கள் வாழ்ந்த கரூர் மண்ணில், 41 அப்பாவி உயிர்கள் படுகொலை செய்யப்பட்ட மண் என்பதை மறக்க முடியாது. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.

முடியாத தி.மு.க அரசு ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது 2026-ல். நிச்சயம் ஈரோடு போல கரூரிலும் ஜவுளிச் சந்தை கொண்டுவரப்படும்" என்றார்.

அப்போது, கரூர் மாவட்டத்தின் நான்கரை ஆண்டு அவலநிலை எனத் தலைப்பிட்டு, இரண்டு நிமிட காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு, தனது உரையைத் தொடர்ந்த நயினார் நாகேந்திரன்,

"கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை, குறிப்பாக மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, மாறாக 24 மணி நேரமும் டாஸ்மாக்கைத் திறந்து வைத்து விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

பகலில் பத்து ரூபாய் கூடுதலாக பாட்டிலுக்கு வசூல் செய்வது, இரவில் 20 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து மது விற்பனை செய்வது என்று மதுக்கடைகளில் தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜிதான்.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது, பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடையில் எவ்வளவு இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.

தீபாவளிக்கு ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் இந்த அரசுக்கு, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மக்களுக்காக சேவை செய்ய தி.மு.க அரசால் முடியவில்லை.

கோபாலபுரத்தில் இருந்து ஒரு மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. அதுபோல, கரூரிலும் ஒரு மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டுமா, வேண்டாமா? கரு கொண்ட கருவூரில் இப்போது நான் பேசுகின்றேன். தி.மு.க ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

பணத்தை வைத்து, ஆட்சியைத் தக்க வைத்து விடலாம் என நினைக்கிறார்கள். கரூர் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதற்கு கரூர் தொகுதி தயாராகி வருகிறது எனத் தகவல்கள் வருகின்றன.

கரூர் தொகுதிக்கு மட்டும் 99 கோடி ஒதுக்கீடு செய்து வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் எவ்வளவு பணம் வாக்காளர்களுக்கு வழங்க தயாராக வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் பணம் நடமாடி வருகிறது. இவையெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் தி.மு.க-வினர் கொள்ளையடித்த பணம்.

சார் (SIR) என்ற வாக்காளர் திருத்தம் தற்பொழுது தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படுவதால் தி.மு.க-வுக்குப் பயம் உண்டாகியுள்ளது.

இதற்காக, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்தான் வாக்காளர் சிறப்பு முகாமை நடத்தி போலி வாக்காளர்களை அகற்றி உள்ளார்கள். இது கூட தெரியாமல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து நிர்வாகிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.

தமிழக விவசாயிகளுக்காக ஒன்றிய அரசு எண்ணற்ற திட்டங்களைப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், நான் டெல்டாகாரன் எனக் கூறும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இன்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். விவசாயிகளுக்காக கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு திறக்கவில்லை. ஆனால், மத்திய அரசு தஞ்சாவூரில் ஆறு கொள்முதல் நிலையங்களைக் கட்டியுள்ளது.

nayinar nagenthiran
nayinar nagenthiran

அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. ஏன் கரூர் மாவட்டத்தில் 76 அரசுப் பள்ளிகளில் இன்று ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஐந்து மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர்தான் காரணம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கு அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக உள்ளது. எங்கு பார்த்தாலும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை எளிதாகக் கிடைக்கின்றது. இதற்கான டீலர்ஷிப் தி.மு.க-வினர் வசம் உள்ளது.

தேர்தலுக்கு முன்னர் ஆட்சிக்கு வருவதற்காக தி.மு.க-வினர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்தனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிக்காக அளிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க அரசால் இயலவில்லை.

எனவே, எதிர்வரும் தேர்தல் யார் தமிழகத்தை இனி ஆளக்கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தலாக உள்ளது. இம்முறை அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கத் தயாராக வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/QjVcxSP

Post a Comment

0 Comments