மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. துணை முதல்வர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்று பொய்யாகக் கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினார்.
இது தொடர்பாக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரர் விஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்ராவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதோடு உடனே ஜாமீனும் வழங்கியது.
இத்தண்டனையை எதிர்த்து மாணிக்ராவும், அவரது சகோதரரும் சேர்ந்து நாசிக் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டைத் திரும்ப பெற வேண்டாம் என்று அரசின் வீட்டு வசதி வாரியமான சிட்கோவிடம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் இவ்வழக்கில் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் மாணிக்ராவ் கோடே ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரின் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவி உடனே பறிக்கப்படவேண்டும். ஆனால் மாணிக்ராவ் கோடேவிற்கு முதலில் விசாரணை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தபோது பதவியைப் பறிக்கவில்லை.
இப்போதும் பதவியைப் பறிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது உடனே எம்.பி பதவியைப் பறித்தனர். அமைச்சர் மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படுமா என்று மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் கேட்டதற்கு, தனக்கு இன்னும் கோர்ட் உத்தரவு வரவில்லை என்று கூறி முடித்துக்கொண்டார்.
இது குறித்து மாணிக்ராவ் கோடேயின் வழக்கறிஞரிடம் பேசியபோது, கோர்ட்டில் தடை வாங்க ஒரு மாதம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து உடனே மாணிக்ராவ் பதவியைப் பறிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாணிக்ராவும், அவரது சகோதரரும் தங்களுக்குக் குறைவான வருமானம் இருப்பதாகக் கூறி அரசின் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இது தொடர்பாக அவர்கள் மீது 1995ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
from India News https://ift.tt/57Gqf6w
0 Comments