விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
பழைய அருப்புக்கோட்டை சாலை மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலை கழிவு நீர் செல்வதற்காகத் தோண்டி பல மாதங்கள் ஆகியும் ஏன்? இன்னும் சீரமைக்கவில்லையென உறுப்பினர் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ், கலையரசன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தலைவர், "உடனடியாக அங்கு வடிகால் கட்டும் பணி துவக்கப்படும்” என்றார்.
குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பலமுறை தெரிவித்தும் சீரமைக்கும் பணி நடைபெறவில்லையென உறுப்பினர்கள் சரவணன், வெங்கடேஷ், முத்துலட்சுமி ஆகியோர் புகார் தெரிவித்தனர்.
“சேதமான சாலைகளை ஆணையாளருடன் நேரில் வந்து ஆய்வு செய்து பராமரிப்புப் பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கூட்டரங்க அறையில் ஒலிபெருக்கி வசதி இல்லை. மேற்கூரை சேதமடைந்து உள்ளது. உடனே சீரமைக்க வேண்டுமென முத்துராமன் கோரிக்கை விடுத்தார்.
பாலகுருகுலம் பகுதியில் சாலை அமைக்க வேண்டுமெனப் பலமுறை தெரிவித்தும் ஏன்? நடவடிக்கை இல்லையென உமாராணி கேள்வி எழுப்பினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் பதில் கூறினார்.
வீடு, கடைகளுக்கான சொத்து வரியை விதிமுறைகளை மீறி பலமடங்கு உயர்த்தியுள்ளனர். அதைக் குறைத்திட மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என உறுப்பினர்கள் ஜெயக்குமார், கலையரசன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ஆணையாளர் புதிதாக வந்துள்ளார். இப்பிரச்னை குறித்து அவருக்கு எடுத்துக் கூறுவோம். உரிய நடவடிக்கை அவர் மூலம் எடுக்கப்படும்” என தலைவர் தெரிவித்தார்.
தர்காஸ் தெரு பகுதியில் உள்ள ரேசன் கடை சிறியதாக உள்ளது. அதைப் பெரியதாகக் கட்ட வேண்டும். இங்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பஷீர் அகமது தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த தலைவர், “ரேசன் கடை பொதுநிதியில் கட்டுவதற்குத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. எம்.எல்.ஏ அல்லது எம்.பி நிதி கிடைத்தால் அதன் மூலம் கட்டுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றலாம்” என்றார்.
பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம், மண் அள்ளும் வாகனம் ஆகியவை எப்போது வாங்கப்படும் என உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பொறியாளர், “மண் அள்ளும் வாகனம் விரைவில் வாங்கப்படும். ஜெட்-ரோடர் வாகனம் வாங்க திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி கிடைத்ததும் வாங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
எப்போது இடிந்து விழும் என்கின்ற பயத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள்.
விருதுநகர் நகராட்சியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெறும் ராஜா அரங்கத்தின் மேற்கூரை எப்போது விழும் என்கின்ற பயத்தில்தான் ஒவ்வொரு முறையும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பலமுறை இது குறித்து தலைவரிடம் கூறியும் இந்த மேற்கூறையைச் சரி செய்யவில்லை. அதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக இரண்டே இரண்டு மைக் மட்டுமே வைத்து கூட்டம் நடைபெறுகிறது.
இதனால் குறைகளையும், தங்களால் ஆட்சேபனை தெரிவிக்கும் தீர்மானங்கள் பற்றியும் நகர்மன்ற உறுப்பினர்கள் விரிவாகப் பேச முடியவில்லை எனக் கூறுகிறார்கள்.
from India News https://ift.tt/uOjQlmP
0 Comments