தொழிலாளர் நலச் சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்... மாற்றமா... தடுமாற்றமா?

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பார்கள். காலத்துக்கேற்ப சட்டங்களும் மாற்றப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், 1950,-60-களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 29 தொழிலாளர் நலச் சட்டங்களை, இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்து 4 தொகுப்புச் சட்டங்களாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், ‘அது மாற்றமா... தடுமாற்றமா?’ என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

புதிதாக வந்துள்ள தொகுப்புச் சட்டங்களில்... அமைப்புசார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியம், கிராஜுட்டி போன்ற அனைத்துப் பலன்களும், அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கும்; நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்குவதுபோல பணி சார்ந்த அனைத்துப் பலன்களும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்; குறிப்பிட்ட தேதியில் கட்டாயம் சம்பளம் கொடுக்கப்படும்; கிராஜுட்டி கொடுப்பதற்கான பணிக்கால வரம்பு 5 வருடங்களிலிருந்து ஒரு வருடமாகக் குறைக்கப்படுகிறது; பாலின பேதமற்ற சம ஊதியம், ஓவர்டைம் ஊதியம் எனத் தொழிலாளர்களுக்குச் சாதகமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், “பாதகமான அம்சங்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன’’ என்பதுதான் சமூக செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. “தேவைப்படும் வரை தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமலே வைத்திருக்கலாம் என்றொரு ஆபத்தான ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. 100 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட நிறுவனங்கள், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது அல்லது ஆலையை மூடுவது குறித்து அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், தற்போதோ அந்த உச்சவரம்பு, 300 அல்லது அதற்கு மேல் என உயர்த்தப் பட்டுள்ளது. ஆக, கேள்வியே இல்லாமல் வேலையை விட்டு நீக்கலாம், அல்லது ஆலையை மூடலாம் என்கிற அதிகாரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இரவுப் பணி வாய்ப்பு என்று கூறி சுரண்டலுக்கான சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளனர். ஆனால், ஒப்பந்தப் பணியாளர்களுக்கான நிரந்தரப்படுத்துதலை கைவிட்டுள்ளனர். போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் பலவும் இந்தப் புதிய சட்டத் தொகுப்பில் காணாமல் போய்விட்டன’’ என்று தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பிக் கிடக்கின்றன.

எந்தவொரு கொள்கை அல்லது சட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசிக் காமல், கருத்துகளைக் கேட்காமல் முடிவெடுப்பது, ஆபத்தானதே. மேலும் சட்டங்கள் எவ்வளவு சிறப்பாக இயற்றப்பட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதமாக்கித் தவறு செய்பவர்களே அதிகம். இந்தச் சூழலில், தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் இந்தச் சட்டங்களையெல்லாம் நேர்மையாகப் பின்பற்றுவார்கள் என்று யாரால் உறுதி கூறமுடியும்.

முதலாளிகள், தொழிலாளர்கள் என்பவர்கள்... பொருளாதார வளர்ச்சி எனும் நாணயத்தின் இரு பக்கங்கள். எனவே இருதரப்புமே பயனடையும் வகையில் சட்டங்கள் இருப்பதும், நடைமுறைப்படுத்தப்படுவதும்தான் அவசியம் என்பதை, ஆள்வோர்கள் எப்போதும் உணர்ந்தே இருக்க வேண்டும்.

- ஆசிரியர்



from India News https://ift.tt/Aet2P4a

Post a Comment

0 Comments