தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.
அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.
அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/U7gBZRq
0 Comments