சிகிச்சையில் கவனக்குறைவு; வெட்டப்பட்ட பச்சிளம் குழந்தையின் விரல்- வேலூர் அரசு மருத்துவமனை அதிர்ச்சி!

வேலூர் முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜ் (வயது 30). இவரின் மனைவி நிவேதா (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிவேதாவுக்கு கடந்த 24-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அழைத்துசென்று சேர்த்தனர்.

நிவேதாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் பேறுகால பின்சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று நர்ஸ் ஒருவர் குளுக்கோஸ் பாட்டிலில் இருந்த ஊசியை மாற்றுவதற்காக குழந்தையின் வலது கை மணிக்கட்டுடன் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கத்தரிக்கோலால் வெட்டினார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டை விரலுடன் சேர்த்து வெட்டியதில் கட்டை விரலும் துண்டானதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தை கதறியது.

அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் அலட்சியத்தாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு துண்டான விரலுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



from India News https://ift.tt/9ViqlBc

Post a Comment

0 Comments