Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்துவிட்டன. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்னென்ன அருந்த வேண்டும் என சொல்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

பானகம்
பானகம்

இந்த வெயில் காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் காக்கும் பானங்களில் பானகம் மிக முக்கியமானது. புளி கரைத்த நீரில் தேன், ஏலக்காய்த்தூள், சீரகம் போன்றவை சேர்த்து பானகம் தயாரித்து அருந்தலாம். இதைக் குழந்தைகளுக்கும் பழக்க வேண்டியது மிக முக்கியம். பானகம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தைப் பாது காக்கும்.

அதேபோல, கோடைக்காலத்தில் உண்டாகும் `டயரியா’ எனப்படும் வெப்பக் கழிச்சல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. எனவே, பானகம் என்பதை ஆன்மிகம் சார்ந்த உணவாக மட்டும் பார்க்காமல், கோடை உணவாகவும் பார்க்க வேண்டியது மிக அவசியம்.

மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்குப் பானகம் கொடுக்கலாம். பானகத்தை அறிமுகம் செய்யும்போது அதிக அளவில் கொடுக்காமல் 20 மில்லி என்ற அளவில் கொடுக்கலாம். வெயிலில் ஓடியாடி விளையாடிவிட்டு பிள்ளைகள் வியர்வையுடன் வீட்டுக்குத் திரும்பும் சமயங்களில், முதலில் அவர்களது வியர்வையைத் துடைத்துவிட்டு, சற்று நேரம் ஆசுவாசப்படுத்துங்கள். வியர்வை அடங்கியதும் பானகத்தைக் கொடுங்கள். இதைக் குடித்த பின்னர் அவர்கள் மிகவும் இதமாக உணர்வார்கள். அதுமட்டுமல்லாமல் இது குடிப்பதற்கு சுவையுடன் இருக்கும் என்பதால், அவர்களது விருப்பமான டிரிங்க் வரிசையில் பானகமும் இடம்பிடித்து விடும்.

மோர்
மோர்

மோர், உடலில் நல்ல பாக்டீரியாக்களை தக்கவைக்கும் மற்றும் அதிகரிக்கும் `புரோபயாடிக்ஸின்' (Probiotics) ஆகச்சிறந்த ஊற்றாக இருக்கிறது. எனவே, இந்தக் கோடைக்காலத்தில் மோரை நிறையப் பருகுங்கள். பொதுவாக, மண் பானையில் வைத்துப் பருகலாம். ‘சளி பிடித்துவிடுமோ?’ என்று பயப்படுகிறவர்கள் கடுகு, சீரகம் போன்றவற்றை அதில் தாளித்துக் குடிக்கலாம். மோர் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு நமது நோய் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால் அதற்கு உங்கள் டயட்டில் அதிக இடம் கொடுங்கள். மூன்று வயதுக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவருமே மோரைப் பருகலாம். சளி பிடித்திருக்கிறது அல்லது காய்ச்சல் அடிக்கிறது என்றால் மட்டும் மோர் குடிப்பதைத் தவிர்த்திடலாம். மற்றபடி நார்மலாக இருக்கும் நேரங்களில் மோர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த வெயில் காலத்தில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் குழந்தைகளும் பெரியவர்களுக்கும் குடும்பத்தில் கூடுதல் கவனம் கொடுக்கப்பட வேண்டும். இவர்கள், பழங்களை துண்டுகளாக நறுக்கி உண்ணாமல் பழச்சாறாக எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெயில் உண்டாக்கும் நீரிழப்பை ஈடுகட்ட முடியும். அப்படி பழச்சாறு தயாரிக்கும்போது வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்துப் பருகுவது நல்லது. நீரிழிவு நோயாளிகள் மட்டும் தவிர்க்க வேண்டும்.

பழச்சாறு
பழச்சாறு

மூலிகை நீரைத் தயாரிப்பதற்கு நன்னாரி வேர், வெட்டி வேர், தேற்றான் கொட்டை, நெல்லி வற்றல் ஆகியவை தேவைப்படும். இவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். இந்த நான்கு பொருள்களையும் நாட்டு மருந்துக் கடையில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர், இவற்றை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு முடிச்சு போலக் கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை மண் பானையில் போட்டு அதில் நீரூற்றுங்கள். ஓரிரு நாள்களுக்குப் பிறகு இந்தத் தண்ணீரைக் குடித்தால் அது குளிர்ச்சியாக இருப்பதோடு நல்ல வாசனையுடனும் சுவையுடனும் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இத்தண்ணீர் உதவும். குறிப்பாக, ஃபிரிட்ஜில் வைத்து நாம் பயன்படுத் தும் ஐஸ் வாட்டரில் இல்லாத நன்மைகள் இந்தச் சில்லென்ற தண்ணீரில் அபரிமிதமாகக் கிடைக்கும்.

வீட்டில் மண்பானை இல்லையெனில், சாதாரணமாக நீங்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கும் பாத்திரங்களிலும் இந்த மூலிகை முடிச்சைப் போட்டு வைத்து, பின்னர் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி வரலாம்.

வெயில் காலத்தில் கிடைக்கும் பழங்களில் தர்ப்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்கு நல்லதொரு ஆகாரம் இது. இதில் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வாரம் ஒருமுறை குறைவான அளவில் தர்ப்பூசணித் துண்டுகளை உண்ணலாம். முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரிப்பழத்தையும் ஜூஸாக்கி அருந்தலாம்.

இளநீர்
இளநீர்

இளநீரில் நம் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, இந்தக் கொளுத்தும் கோடையில் தினமும் இளநீர் குடிக்கலாம். குறிப்பாக, நீரிழப்பைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தாலோ, மிகவும் சோர்வாக இருந்தாலோ உடனே இளநீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் உடனடியாகக் கிடைத்துவிடும். இளநீரின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே இதுதான்.

இரண்டு, மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கத் தொடங்கலாம். சளிப் பிடித்துவிடும் என்ற அச்சம் இருந்தால், முதலில் ஸ்பூன் கணக்கில் கொடுக்கத் தொடங்கி, உடலானது இளநீரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய பின்னர் இதன் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகளுக்கு அதிகரிக்கலாம்.

பொதுவாக, நோயாளிகளுக்குத்தான் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணக் கொடுக்க வேண்டும் என்ற தவறான புரிதல் நம்மில் பலரிடம் நிலவி வருகிறது. இவை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை அனைவருமே உண்ண வேண்டும். உடனடி ஆற்றல் கொடுக்கும் இந்தப் பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் வைட்டமின் - சி போன்றவை நிறைந்துள்ளன. இந்தக் கோடைக்காலத்தில் மற்றுமொரு சிட்ரஸ் பழமான எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ள நாம் தவறக்கூடாது. தினமும், ஐஸ் போடாமல் எலுமிச்சை ஜூஸை பருகலாம். எலுமிச்சையில் உள்ள புளிப்புக்கு மாற்று இனிப்பு என்றாலும், அது வெள்ளை சர்க்கரையாக இல்லாமல் பனை வெல்லமாக இருப்பது நலம் பயக்கும். எலுமிச்சை ஜூஸில் உப்பு மற்றும் பனை வெல்லம் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பருகினால் வெயிலினால் உண்டாகும் நீரிழப்பை தடுக்கலாம். எலுமிச்சை, பித்தத்தை தெளிய வைக்கும் இயல்பு கொண்டது என்பதால் இதை கோடைக்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

juice
பழச்சாறுகள்

நாட், பட் நாட் லீஸ்ட்... இந்தக் கோடைக்காலத்தில் பருகவேண்டிய மிக முக்கியப் பானமே நீர்தான். வெயில் காலத்தில் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால், தாகம் எடுக்க எடுக்கத் தண்ணீர் குடித்துவிடவேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காமல் இருந்தால் உடலின் நீர்ச்சத்து குறைந்து அதனால் உடல் பாதிக்கப்படும் என்பதை மனதில் வைத்துச் செயல்படவேண்டியது மிக அவசியம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from India News https://ift.tt/NjS7ygo

Post a Comment

0 Comments