சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர்.

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் கொட்டி தாக்குதல்
சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் கொட்டி தாக்குதல்

திருமாவளவன் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.

திருமாவளவன்

எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்".

இ.பி.எஸ்ஸின் எச்சரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது எக்ஸ் தளத்தில், "ஊடகவியலாளர் திரு.சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருள்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருள்கள் என்று அனைத்துப் பொருள்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

எடப்பாடி பழனிசாமி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று தன் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/mTMfso0

Post a Comment

0 Comments