அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘‘தனியார் பால் 56 ரூபாய்க்கும், ஆவின் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு 16 ரூபாய் குறைவாகவே ஆவின் பாலை வழங்கி வருகிறோம். கடந்த ஆட்சியைவிட, தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்ட மன்றத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு சுமார் 35 லட்சம் லிட்டர். ஆனால், ஆவினிடம் பாடம் கற்றுச் சென்ற கர்நாடகா மாநில அரசின் நந்தினி நிறுவனம், சுமார் 1 கோடி லிட்டர் பாலைக் கொள்முதல் செய்து அசத்தி வருகிறது.
பால் மற்றும் பால் பொருள்களின் விற்பனையில் சிறந்து விளங்கும் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனத்தோடு போட்டி போட்டு, அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது நந்தினி. இதனால், அமுல்கூட கொஞ்சம் அச்சத்தில்தான் உள்ளது.
2000-ம் ஆண்டில் நந்தினியின் தினசரி பால் கொள்முதல் சுமார் 18 லட்சம் லிட்டர் என்று மிகமிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. மானிய விலையில் கால்நடை தீவனங்கள், பால் உற்பத்திக்கான செலவினங்களுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையோடு ஊக்கத்தொகையையும் அவ்வப்போது உயர்த்தி வழங்கியது நந்தினி. தனியாருடன் கடுமையாகப் போட்டிபோட்டுக்கொண்டே இருக்க... நாள்தோறும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது நந்தினி.
ஆனால், இங்கே ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருப்பதைத்தான் செய்துவருகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆவினில் கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவிலான ஒன்றியங்கள், மாநில அளவிலான இணையங்கள் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். தேவையற்ற நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட ஆக்கபூர்வ நடவடிக்கைக்கான கோரிக்கைப் பட்டியல் நீள்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின் குளறுபடிகளை மேற்கோள்காட்டி புளகாங்கிதம் அடைவதிலேயே குறியாக இருக்கிறார், இன்றைய பால்வளத்துறை அமைச்சர்.
பால் விலையை ஏற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக லிட்டருக்கு 3 ரூபாயைக் குறைத்தது தமிழ்நாடு அரசு. ஆனால், அதற்கான தொகையை ஆவினுக்கு வழங்காததால், நிதி நெருக்கடியிலும் சிக்கித்தவிக்கிறது ஆவின். இன்னொரு பக்கம், லிட்டருக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
ஆவின், தன் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள், அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைத்து, ஆவின் நிர்வாகத்தை சீர்ப்படுத்த வேண்டும். இல்லையேல்... ‘ஒரு காலத்தில் ஆவின் என்றொரு நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்பட்டது’ என்று படிக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்; ஜாக்கிரதை!
from India News https://ift.tt/vMqSc9w
0 Comments