தேனியில் அதிமுக பொதுக்கூட்டம்..
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டத்தில் நடைபெறுகிற இந்தப் பொதுக்கூட்டம் மாநாடு போல் உங்களால் காட்சியளிக்கிறது. இதைப் பார்த்தால் பல பேருக்கு எரிச்சல்தான் வரும். எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல். அவரை வேறு யாரும் ஏற்க மாட்டார்கள் என்று இங்கே இருக்கும் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
நான் சில தகவல்களை கூறுகிறேன் எது சரி? எது தவறு? என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று தர்மயுத்தம் என்று தொடங்கினார். இவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார். பெரும்பான்மை ஆதரவுடன் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று திமுக தீர்மானம் கொண்டு வந்த போது, ஜெயலலிலதா அவர்களின் அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட மனிதர் இந்த மனிதர். ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுகவிற்கு துணை நின்றவர் இந்த மண்ணிலே பிறந்தவர்.
`89-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான்'
நானா துரோகம் செய்தேன். அதற்கும் மேலாக இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து பணிகளை செய்தவர். இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் சொத்து தலைமை கழகக் அலுவலகம். அந்த சொத்தை ரவுடிகளை கொண்டு சென்று அடித்து நொறுக்கி, திமுக உதவியுடன் சீல் வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது துரோகம் இல்லையா?எங்களை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம். நீங்களாக போனீர்கள்.
ஜெயலலிதாவிற்கு விசுவாசம் விசுவாசம் என்று கூறிக்கொண்டு, 89-ல் ஜெயலலிதா போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிறாடை நிர்மலாவுக்கு வேலை செய்தார். இவரா ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தவர்?அதே சேவல் சின்னத்தில் 89-ல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான்.
`மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல்'
நீங்கள் 2001-ல் தான் எம்எல்ஏ. நான் 89 -லேயே எம்எல்ஏ. உங்களைவிட 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் சட்டமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர், வாரியத் தலைவர் என பல பதவிகளை வகித்தவன். அவருக்கு பதவி இல்லையென்றால் கட்சியை பார்க்க மாட்டார். அவரை மட்டும்தான் பார்த்துக் கொள்வார் 2001-ல் எனது தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனக்கு வேறு தொகுதி கொடுத்தார்கள். ஆனால் நான் போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு வேலை செய்து வெற்றி பெற வைத்தேன். தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் தொண்டனின் கடமை. அதனால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். துரோகம் செய்தவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
இது மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல். இந்தக் கப்பலில் ஏறுகிறவர் பிழைத்துக் கொள்ளலாம். ஏறாதவர் நடுக்கடலில் சென்று விடுவார். 2026-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இதே மேடைக்கு மீண்டும் நான் வருவேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/woP51sC
0 Comments