விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இப்பகுதியை சேர்ந்த மரியசின்னம்மாள் (வயது 68) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் பொருட்டு, உறவினர்கள் இணைந்து சீனியாபுரம் பொது மயானத்தில் ஈமகாரிய ஏற்பாடு செய்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/eg133vou/IMG20250207205056.jpg)
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மரியசின்னம்மாளின் உடலை இறுதி ஊர்வலமாக அவரின் உறவினர்கள் எடுத்து வந்தனர். அப்போது, ரைட்டன்பட்டியை அடுத்த சீனியாபுரம் பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர், அப்பகுதியில் உள்ள மயானத்தில் மரிய சின்னம்மாளின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இறுதி ஊர்வலத்தை நிறுத்தியதோடு, ரைட்டன்பட்டி பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரைட்டன்பட்டி பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இறந்தவரின் உடலோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்கள் அனைவரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் -மதுரை சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ஸ்ரீவில்லிப்புத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசைக்கட்டின. பொதுமக்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/n6vplney/IMG20250207205118.jpg)
தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய பொதுமக்கள், "ரைட்டன்பட்டி, சீனியாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பொதுவாக சீனியாபுரம் பகுதியில் உள்ள மயானத்தை தான் ஈம காரியங்களுக்காக பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரைட்டன்பட்டி பகுதியில் எவரொருவர் இறந்தாலும், சீனியாபுரம் மயானத்தில் உடலை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
உடலை புதைப்பதற்கும், ஈமகாரியம் செய்வதற்கு பணம் கேட்கிறார்கள். அவர்களோடு பெரும் போராட்டம் நடத்திய பின்னரே இறந்தவர்களின் உடலை புதைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. வயது மூப்பு, உடல்நலமின்மை காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து எங்கள் பகுதியில் துக்கம் அனுசரிக்க கூடிய சூழல் உண்டாகிவிட்டது. இந்த நிலையில் இன்றும் கூட மரிய சின்னம்மாளின் உடலை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். இதற்கு மேலும் இந்த பிரச்னைக்கு முடிவு தெரியாமல் யாரும் இங்கிருந்து நகரப்போவதில்லை" என ஆவேசமாக கூறினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/mpnxsynk/IMG20250207204951.jpg)
இதையடுத்து பேசிய வருவாய்த்துறையினர், "மயானத்தை பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் தடுக்க மயான கேட்டின் சாவியை இனிவரும் காலங்களில் வருவாய்த்துறை வசமே இருக்கும். இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய எந்த தடையும் இருக்காது" என உறுதிஅளித்தனர். இதைத்தொடர்ந்தே பொதுமக்கள் சாலைமறிமலை கைவிட்டு கலைந்து சென்றனர். ரைட்டன்பட்டி பொதுமக்கள் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீவில்லிப்புத்தூர்-மதுரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
from India News https://ift.tt/ag2XGvS
0 Comments