Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்... RBI காரணமா?!

கடந்த சில நாட்களாகவே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 'இப்படியே சென்றால், இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லதல்ல' என்று கடும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்திய ரூபாய் மதிப்பின் சரிவிற்கு காரணம் என்ன... இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் க.ஜோதி சிவஞானம்.

பொருளாதார நிபுணர் க.ஜோதி சிவஞானம்

"பொதுவாகவே, ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைவது நல்லதல்ல. அதுவும் வரலாறு காணாத அளவிற்கு குறைகிறது என்றால், அது பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளதற்கான அடையாளம், அபாய அலாரம்.

இந்தியா இப்போது அந்த அபாய அலார படிநிலையில் உள்ளது. இந்திய ரூபாய் தற்போது சரிந்து வருவதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளது.

விலைவாசி உயர்வு

அதில் இந்தியாவில் இருந்து வரும் 'தொடர் விலைவாசி உயர்வு' முதல் மற்றும் முக்கிய காரணம். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் விலைவாசி 5 - 6 சதவிகிதமாக தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது.

இரண்டாவதாக, விலைவாசி உயர்வால் இந்திய ரூபாயின் வாங்கும் திறன் மிகவும் குறைந்துள்ளது. உதரணமாக, இதுவரை 100 ரூபாய்க்கு வாங்க முடிந்த ஒரு பொருளை, இப்போது 120-க்கு ரூபாய்க்கு வாங்குவதாக ஆகும்போது, இந்திய ரூபாயின் வாங்கும் திறன், அதன் மதிப்பு குறைகிறது.

வாங்கும் திறன் குறைந்த...

மூன்றாவது, டாலருடன் ஒப்பீட்டளவில் 'வாங்கும் திறன் குறைந்த நாணயம் வேண்டாம்' என்று முதலீட்டாளர்கள், இந்திய ரூபாயின் மீது செய்திருந்த முதலீடுகளை விற்கின்றனர். காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதாலும், இங்கு செய்துள்ள முதலிடுகளின் மதிப்பு சரிவதாலும், அதனை தவிர்க்க முதலீட்டாளர்கள் இந்திய ரூபாய் முதலீடுகளில் இருந்து வெளியேறுகிறார்கள். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் இந்தியாவை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான விலைவாசியே உள்ளது. அதனால், அந்த நாடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். இப்படி பணமதிப்பிழப்புகள் நடப்பதால் நாணயத்தின் வாங்கும் திறன் குறையும். நாணயத்தின் வாங்கும் திறன் குறையும் போது, முதலீடு குறையும், வளர்ச்சி விகிதம் குறையும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் மக்களின் வருமானம், நுகர்வு திறன் குறையும். மக்களில் நுகர்வு குறையும்போது, பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்படையும். பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, பொருளாதார ஸ்திரதன்மை இல்லாமல் போகும்.

'மேக் இன் இந்தியா' கைகொடுத்ததா?

'மேக் இன் இந்தியா' கைகொடுத்ததா?

இந்த நிலை தொடர்ந்தால், அதாவது உயரும் விலைவாசி குறையும் பொருளாதார வளர்ச்சி முதலில் பணவாட்டம் (Deflation) ஏற்படும். மேலும், தொடர்ந்தால் பொருளாதார மந்தநிலை ஏற்படும்.

நான்காவது, இந்தியா இப்போது ஏற்றுமதியை விட, தங்கம், கச்சா எண்ணெய், உள்ளீடுகள் போன்றவற்றின் இறக்குமதியை அதிகம் செய்து வருகிறது. உற்பத்தி பொருள் மற்றும் சேவையை ஏற்றுமதி செய்யும்போது, இந்தியாவிற்குள் டாலர்கள் வந்து குவியும். இதுவே, இறக்குமதி செய்யும்போது, இந்தியாவில் இருக்கும் டாலர்கள் வெளியே போகிறது. இதனால், டாலர் கையிருப்பு குறைகிறது.

ஏற்றுமதி குறைந்ததற்கு 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் கைகொடுக்காதது முக்கிய காரணம்.

இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்தது?

ஒரு நாடு வளர்ச்சி அடையும்போது, உற்பத்தி துறையும், சேவை துறையும் செழிப்பாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது சேவை துறை மட்டுமே நன்றாக உள்ளது. உற்பத்தித்துறை பின்னடைந்ததால் இது நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளும். உற்பத்தி திறன் குறைந்திருப்பதால் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை அதிகம் செய்ய முடியாது. இது முக்கிய பிரச்னை ஆகும்.

ஐந்தாவது, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பை நிலையாக வைக்க முடியாமல், அதன் தொடர் சரிவை தடுக்க நம்மிடம் இருக்கும் டாலர்களை விற்று, ரூபாயை வாங்கி இந்திய ரூபாயின் மதிப்பை ஸ்திரப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால், நம்மிடம் இருக்கும் அந்நிய செலவாணி குறையுமே தவிர, இந்திய ரூபாய் மதிப்பை சரிசெய்ய முடியாது. மேலும், டாலரை விற்கும்போது, நம்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.

RBI-ல் வேலைவாய்ப்பு!
இந்திய ரிசர்வ் என்ன செய்தது?

ஜி.எஸ்.டி என்ற மறைமுக வரி...

மத்திய அரசு நேரடி வரியை அதிகரிப்பதற்கு பதில், ஜி.எஸ்.டி போன்ற மறைமுக வரியை அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் நுகர்வுதிறன் மிகவும் குறைந்து வருகிறது.

பெட்ரோல் மீது தொடர்ந்து விலையை ஏற்றி வருகிறது. இது பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.

அடுத்ததாக, கடனை மேலும் மேலும் வாங்குவது, கடனில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்பை உருவாக்கவே உருவாக்காது.

பொதுவாகவே, ஒரு நாட்டின் நாணய மதிப்பு, அதன் டிமாண்ட் மற்றும் சப்ளையை பொறுத்து அமையும். மேலே கூறியுள்ள காரணிகளால், இந்திய ரூபாயின் டிமாண்ட் குறைந்துள்ளது. டிமாண்ட் இல்லாத நாணயம் வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் இந்திய ரூபாயை விற்றுவிட்டு, டிமாண்ட் இருக்கும் பிற நாட்டு நாணயங்கள் பக்கம் தங்களது முதலீடுகளை திருப்புகின்றனர்.

இவை அனைத்தையும் சரி செய்தால் தான், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இருந்து மீளும். கூடுதலாக, இந்திய ரூபாயின் எக்சேஞ்ச் ரேட்டை ஸ்திரப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/dPDTHag

Post a Comment

0 Comments