மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம் அதிகரித்துக்கொண்டே போனது. சமீபத்தில் சி.பி.எம் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், "பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக தி.மு.க-வுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் பட்டா கேட்டுப் போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டுப் பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் நிர்வாகிகளை அழைத்துப் பேரணிக்கு அனுமதியில்லை எனத் சொல்வது ஏன்? எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். எதற்காக அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது" என்று மிகக் கடுமையாகப் பேசியிருந்தார்.
மாநாட்டில் பிரகாஷ் காரத் பேசும்போது, "மத்திய அரசு தனது தவறான கொள்கைகளை முன்னெடுக்கும் போது, தி.மு.க அதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய தி.மு.க அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது" என்று பேசியிருந்தார்.
கே.பாலகிருஷ்ணன் கருத்துக்களைத் தொடர்ந்து முரசொலியில் ஒரு கண்டன செய்தி வெளிவந்திருந்தது. அதில், "பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.?
கூட்டணிக் கட்சி என்பதற்காகப் போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனசாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதிர்க்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால்தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும், ஊடகங்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதைப் பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது." என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து திமுக-வின் செய்தித் தொடர்பு செயலாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். " திமுகவுக்கும், சி.பி.எம்-க்கும் எந்த அடிப்படையில் கூட்டணி அமைந்ததோ அதில் இப்போதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எங்களின் கொள்கை, கோட்பாட்டில் எதை முரண்பாடும் கிடையாது. தோழர் பாலகிருஷ்ணன் பேசும்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று கொஞ்சம் அதிகமாக வார்த்தையை விட்டுவிட்டார். எமர்ஜென்சி போல இங்கு எந்த ஒரு சூழலும் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எங்களுக்கும் பல போராட்டங்களுக்கு அனுமதி கிடைத்ததில்லை. அந்த நேரத்தில் போராட்டம் நடத்தி கைதான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்த கைது சம்பிரதாயத்துக்காகச் செய்யப்படும் கைது என்பது அனைவருக்குமே தெரியும்.
போராட அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். அதே கே.பி தீக்கதிரில் போராட்டங்கள் பட்டியலைச் சொல்கிறார். இதிலேயே முரண்படுகிறது. தோழர் சண்முகமும் இதுகுறித்து விளக்கமும் கொடுத்திருக்கிறார்.எவ்வளவு தூய்மையாக ஆட்சி நடத்தினாலும் அதில் குறைகள் இருக்கும், அதனை சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள்.
ஜனநாயக நாட்டில் கூட்டணி குறித்துப் பேச அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், தோழர் சற்று மிகப்பெரிய வார்த்தையைப் பயன்படுத்திவிட்டார். எதிர்க்கட்சிகள் உண்மையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அவற்றுக்கு உரம் சேர்ப்பது போலக் கருத்துக்கள் அமைந்துவிடக் கூடாது. அதற்கு முரசொலியும் பதில் சொல்லியிருக்கிறது. மற்றபடி எங்களுக்கும் எந்த முரண்படும் கிடையாது. தோழர்களுடன் தோழமையுடன் கூட்டணியில் தொடர்கிறோம்" என்றார் விரிவாக.
இந்த தேர்தல் முதல்வர் ஸ்டாலினுக்கு எப்படி இருக்கப் போகிறது, கூட்டணிக் கட்சிகளை, தோழர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறார் முதல்வர் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம், "திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே பாஜகவை எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பில்தான் அனைத்து கட்சிகளும் ஒருசேர நிற்கிறது. இதனைத் தாண்டி, விசிக, கம்யூனிஸ்ட் எனக் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே திமுக அரசின் பல செயல்பாடுகளில் முரண்பட்டு நிற்கிறார்கள். அதில் திமுக கூட்டணிக் கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கவும் தயங்கியதில்லை. கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கும்போது, திமுக சார்பில் அவர்களுக்குப் பதில் விமர்சனம் முன்வைக்கவும் திமுக தயங்கியதில்லை. பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுப்பது குறித்து ஒரு சர்ச்சை வெளியான நிலையில், கே.பி வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் என்று சொன்னார்.
அவருக்கு எங்களின் கடுமையான கண்டனம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்லியது தொடங்கி முரசொலி விமர்சனம் வரை திமுகவும் ஒருபோதும் பதில் விமர்சனத்தை முன்வைக்கத் தயங்கியதே இல்லை. கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் வைக்கின்ற அதே சமயத்தில் அவர்கள் திமுக அரசைப் பாராட்டிப் பேசாமல் இருந்ததும் கிடையாது. கூட்டணிக் கட்சியைப் பல நேரங்களில் அனுசரித்துப் போயிருக்கிறது திமுக.
அதேநேரத்தில் சாம்சங் தொழிற்சாலை போராட்டம் போன்ற பல சமயத்தில் பண்ணையார் மனநிலையிலும் நடத்தியிருக்கிறது. சில கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது திமுக. தற்போதைய தமிழக அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகளை ஓரளவுக்குச் சமாளித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இன்னும் தேர்தலுக்குப் பல மாதங்கள் இருக்கின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தொகுதிப் பங்கீடு சமயத்தில் இன்னும் பல நெருக்கடிகளை திமுக சந்திக்கவேண்டியதிருக்கும். குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு புதிய சில வாய்ப்புகளும் வந்திருக்கிறது. இதனால் திமுக ஒரு கட்சியாக பாஜக எதிர்ப்பை மட்டும் வைத்து வரும் தேர்தலில் கூட்டணியை கட்டமைக்க முடியுமா என்பதை பரிசீலிக்கும்" என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/KiSCV1T
0 Comments