இதோ மத்திய பட்ஜெட் தேதி நெருங்கிவிட்டது. நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்.
இந்தப் பட்ஜெட்டை நடுத்தர மக்கள் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறார்கள். இதற்கு அதிகரித்து வரும் பணவீக்கம் தான் மிக முக்கிய காரணம். இவர்களுக்கு ஏற்றாற் போல பட்ஜெட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்.
"அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், 'மக்களுக்கு வருமான வரி இல்லாமல் செய்யப்போகிறேன்' எனக் கூறியிருக்கிறார். இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில், மக்களின் வரி பணத்தை வைத்து தான் பல்வேறு நலதிட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை அரசு செய்து வருகிறது. 'அரசு வரி விதிக்கத் தான் செய்யும். அதனால் நமக்கு பெரிய நன்மைகள் உள்ளது' என்பதை மக்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால், வரி தாரளமாக இருக்கலாம்...ஆனால், தாராள வரி தான் இருக்கக்கூடாது.

முக்கிய வழி!
இந்தியாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது என்று தரவுகள் கூறுகின்றது. இதைக் குறைப்பதற்கான வழிகளில் முக்கியமான ஒன்று, 'வருமான வரியை குறைப்பது' ஆகும். இந்த வரிகளிலும் முக்கியமான ஒன்று, 'ஜி.எஸ்.டி'. ஜி.எஸ்.டிக்கு தனி கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பட்ஜெட்டிலும் ஜி.எஸ்.டி குறித்து சின்ன சின்ன அறிவிப்புகள் வரும்.
இப்போது, ஜி.எஸ்.டி குறித்து அதிக எதிர்ப்புகள் எழுந்துள்ள வேளையில், ஜி.எஸ்.டி குறித்து சில திட்டங்களை அறிமுகப்படுத்தக் கூடும்.
சிங்கப்பூரில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு ஜி.எஸ்.டி கூப்பன்களை வழங்குகின்றன. இதை வைத்து அந்த மக்கள் ஜி.எஸ்.டி வரியை குறைத்துக்கொள்ள முடியும். இதே நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றலாம்.
கூப்பன்...
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தினர்களுக்கு கூப்பன் சலுகையை வழங்கலாம்.
பொதுவாக, விவசாய வருமானத்திற்கு வரி இல்லை. இது பெரிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாய போர்வையில் மறைந்துள்ளவர்களுக்கு மட்டுமே உதவுகிறது. அதனால், இவர்களுக்கும், டாப் பணக்காரர்களுக்கும் அதிக வரி விதித்துவிட்டு, நடுத்தர மக்களுக்கு வரியை குறைக்கலாம்.
50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் கூடுதல் கட்டணத்தை அதிகரிக்கலாம்.

டெபாசிட்டுகளை அதிகரிக்க...
வங்கிகளில் டெபாசிட் குறைகிறது என்று கூறுகிறார்கள். வருமான வரி மட்டும் அதிகமாகி சம்பளம் உயராததால், ஏற்கனவே மக்களின் சேமிப்பு குறைகிறது. இதில் வங்கியில் டெபாசிட் செய்யும் பணங்களுக்கும் டி.டி.எஸ் விதிப்பதால், டெபாசிட்டுகள் குறைகிறது. இந்த டி.டி.எஸ்ஸை நடுத்தர மக்கள் மற்றும் பெரியோர்களுக்கு குறைக்க வேண்டும்.
பழைய வருமான வரியில் வீடுகளுக்கு சலுகைகள் இருந்தது. ஆனால், அது இப்போது புதிய வருமான வரியில் நீக்கிவிட்டார்கள். இதனாலும், மக்களின் வீடு வாங்குவதை குறைத்துள்ளனர். அதனால், மீண்டும் அந்த சலுகையை கொண்டுவர வேண்டும்.
மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் வருமான வரியை புரிந்துகொள்வது முதல் தாக்கல் செய்வது வரை அனைத்தையும் எளிமைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
from India News https://ift.tt/ExLrpKM
0 Comments