அதிமுக உட்கட்சி விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தடை ஆணையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வா.புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க குறித்து நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும்வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "நான்கு வாரத்தில் இந்த மனு குறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட, "இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்துள்ள கே.சி.பழனிசாமி, புகழேந்தி, ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும்" என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க சின்னம் குறித்து வழக்கு தாக்கல் செய்துள்ள சூரியமூர்த்தி அ.தி.மு.க உறுப்பினரே கிடையாது. அப்படிப்பட்டவர் எப்படி அ.தி.மு.க கட்சி குறித்து வழக்கு தொடர முடியும்? அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவும் முடியாது. இவர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையாது. இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று" கூறியிருந்தார்.
இந்த மனு ஜனவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக உரிமையியல் வழக்குகள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது" என்று விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து வருகின்ற 27 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த தடை உத்தரவால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவினை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த வா.புகழேந்தி நேற்று (ஜனவரி 10) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வா.புகழேந்தி, "எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொய் தகவலை நீதிமன்றத்தில் அளித்து தடையாணையைப் பெற்றிருக்கிறார். இது தவறான முன்னுதரணமாகிவிடும். பழனிசாமி ஏன் என்னைப் பார்த்து இப்படிப் பயப்படுகிறார்? பதவி போய்விடும் என்ற பயத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறி தடை ஆணை பெற்றுள்ளார். எங்கள் வழக்கு விசாரணைக்கு வரும்போது உண்மை வெளிவரும்" என்றார்.
Vikatan Audio Books
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
from India News https://ift.tt/5VFLRJa
0 Comments