மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் "அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுகவின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதே போன்று கொடி கம்பம் அமைக்க உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் ஏற்கனவே நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி "தமிழகத்தில் கொடி கம்பம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகளால் 114 வழக்குகள் பதிவாகியுள்ளன" என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், "பொது இடங்களில் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மதம் சம்பந்தமான கொடிகளை அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் மோதலும் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டு விபத்தும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களில் கட்சிக் கொடி கம்பங்களை அமைத்து வருகின்றனர், இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இதனை கருத்தில் கொண்டு கொடி கம்பங்கள் நடுவதில் நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும், மேலும் எதிர்காலத்தில் பொது இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது.
பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து, அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் நடத்தும்போதும் தேர்தல் நேரங்களிலும் கட்சிக் கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்கலாம். அவ்வாறு வழங்கும்பட்சத்தில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகை வசூல் செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதித்துறை உடனடியாக அனுப்ப வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டு, கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/6j0Up1u
0 Comments