திருப்பதி தேவஸ்தானத்தில் தொலைந்த பொருள்களை சேமித்து வைக்கும் கவுண்டர்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் மற்றும் பாஜக பிரமுகர் G.பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அவர்களுடைய பொருள்களை தெரியாமல் கைத்தவறி வைத்து விடுவது, தொலைத்துவிடுவது சகஜம். இத்தகைய பொருள்கள் திருப்பதி தேவஸ்தான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும் தொலைந்த பொருள்களை சேமித்து வைக்கும் கவுண்டரில் பாதுகாக்கப்படும். அந்தப் பொருட்களை யாரும் வாங்க வரவில்லை என்றால் குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு, அது திருப்பதி உண்டியலில் சேர்க்கப்படும். அப்படி சேர்க்கும்போது, அந்தப் பொருள்களின் தகவல்கள் குறிப்பெடுக்கப்படும்.
2023-ம் ஆண்டில் திருப்பதி தேவஸ்தான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு நடத்திய ஆய்வில், குறிப்பேட்டில் பதியப்பட்டுள்ள தகவல்களுக்கும், உண்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதும், அந்தப் பொருள்களின் மதிப்பு கோடிகளை தாண்டும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் உயர் அதிகாரியிடன் கேட்டப்போது, கடந்த ஆட்சியிலேயே இந்த மோசடி குறித்த விசாரணை நடந்துவிட்டது. அதனால், தற்போது எந்த விசாரணையும் தேவையில்லை என்று பதிலளித்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு அறிக்கையில், உடனடியாக புதிய விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிவ சங்கர் கடந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பராகமணி திருட்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/KiqwzQM
0 Comments