குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார்.
இணை இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக இணை இயக்குனர் சங்கர சரவணன் அறிமுகவுரையாற்றினார். வள்ளுவர் குறள் குடும்பம் இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 21.12.2024 அன்று நடத்தப்பட்டதில், 6131 நபர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு குழுக்கள் அமைப்பதற்கு 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 38 மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 150 குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டியில் வினாடி வினா தொடக்கநிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் 40 குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, கால் இறுதிப்போட்டி மற்றும் அரை இறுதிப்போட்டி நடத்தப்பட்டு இறுதிப் போட்டிக்கான குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா இறுதிப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பொ.கணேசன், கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் மற்றும் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஆனந்த் ஆகியோர் குழு முதல் இடம் பிடித்தது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) அறிவொளி, எஸ்.அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) வாசுகி, அருர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) வனசுந்தரி ஆகியோர் குழு 2-ம் பிடித்தது. அடுத்ததாக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) சொர்ணம், முனைஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிராஜீநிஷா மற்றும் கூட்டப்புளி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜாய்ஸ் கர்சீலியா ஆகியோர் குழு 3-ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களில் முதல் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.2 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1.5 லட்சம், 3-ம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1 லட்சம் பரிசும், பாராட்டு சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
தொடர்ந்து 4,5,6-ம் இடங்கள் பிடித்த குழுக்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 6 குழுக்களுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களுக்கான சிறப்பு பரிசாக 3 பேருக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கூறும்போது, "திருக்குறள் தமிழர்களுக்கான பொதுவான ஒரு நூல். அது பள்ளி, கல்லூரித் தேர்வுகள், போட்டித் தேர்வு பாடத்திட்டங்களை தாண்டியும் தொடர்ச்சியாக படிப்பதற்கான வாய்ப்பை தரக்கூடியது. திருக்குறள் என்ற புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அறிவுசார்ந்த தகவல்களை பொழுதுபோக்கான செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்வதற்காவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
from India News https://ift.tt/WNbSCkE
0 Comments