பாஜக: பரபரக்கும் உட்கட்சித் தேர்தல்; சிண்டு முடியும் அணி? - மீண்டும் அரியாசனம் பிடிப்பாரா அண்ணாமலை?

பா.ஜ.க-வில், உறுப்பினர் சேர்க்கைப் பணிகளெல்லாம் முடிவடைந்து, தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், மாநிலத் தலைவராக அவர் மீண்டும் அமர்த்தப்படுவாரா? என்கிற கேள்வியும் அதையொட்டி எழுந்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த அக்கட்சியின் மையக்குழு கூட்டத்திலும், மாநிலத் தலைவர் தேர்தல் தொடர்பாக சூடான விவாதம் நடந்ததாகச் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

பாஜக மையக்குழு கூட்டம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், "பா.ஜ.க-வின் கட்டமைப்பில், பூத் குழு, மண்டல் குழு, மாவட்டக்குழு, மாநிலக்குழு, மத்தியக் குழு என ஐந்து படிநிலைகள் உள்ளன. பூத் கமிட்டியில் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களைச் சேர்த்தால் மட்டுமே, அதை ஒரு குழுவாக அங்கீகரிக்க முடியும். அதிகபட்சமாக, 300 உறுப்பினர்கள் வரையில் சேர்க்கலாம். இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள்தான் மண்டல் கமிட்டிக்கான தேர்தலில் பங்கு பெறுவார்கள். மண்டல் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். மாவட்டத் தலைவருக்கானத் தேர்தலில் மண்டல் கமிட்டியின் தலைவர்களும் உறுப்பினர்களும் பங்காற்றுவார்கள். இந்தப் படிநிலைகளில் ஒவ்வொன்றாகத் தேர்தல் நடைபெற்றுதான், கடைசியாக தேசியத் தலைவருக்கானத் தேர்தல் நடைபெறும். தமிழக பா.ஜ.க-வின் அமைப்புத் தேர்தலில் பூத் கமிட்டியிலேயே பிரச்னை எழுந்திருக்கிறது.

பல இடங்களிலும் 25 பேர் கூட கட்சியில் இணையவில்லை என்பதால், பூத் கமிட்டி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பூத் கமிட்டியை அமைத்தால் மட்டுமே மண்டல் தலைவருக்கானத் தேர்தலை நடத்திட முடியும். தவிர, பா.ஜ.க-வின் கட்சி விதிப்படி, 20 சதவிகிதம் அளவுக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் மட்டுமே மண்டல் பகுதிகளுக்கானத் தேர்தலை நடத்திட முடியும். எதிர்பார்த்தளவு உறுப்பினர்கள் சேராததால், மண்டல் தேர்தலை நடத்த முடியாத சூழல் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க-வில் மொத்தம் 1,239 மண்டல் தலைவர் பதவிகள் உள்ளன. கடந்த மாதத்தின் இறுதியிலேயே முடிந்திருக்க வேண்டிய அந்தப் பதவிக்கானத் தேர்தல், இம்மாதத்தின் பாதியைக் கடந்தும் முடிவுறவில்லை. அதுதொடர்பாக ஆலோசிக்கத்தான், கடந்த டிசம்பர் 16-ம் தேதி மாநில மையக்குழுவின் கூட்டத்தை, மாநிலத் தலைவரான அண்ணாமலை கூட்டினார்.

பாஜக மையக்குழு கூட்டம்

கட்சியின் மேலிட பொறுப்பாளரான அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் நலின் குமார் கடீல், தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, ஏ.பி.முருகானந்தம் என சீனியர்கள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பூத் கமிட்டி அமைக்கப்படுவதில் நிலவும் சிக்கல் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளரான கேசவ் விநாயகம், 'டிசம்பர் 25-ம் தேதிக்குள் மண்டல் தலைவர், மாவட்டத் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலை நடத்தியாக வேண்டும். அப்போதுதான், தேசியத் தலைவருக்கானத் தேர்தலை விரைந்து நடத்திட முடியும். டெல்லியிலிருந்து கடுமையாகப் பிரஷர் வருகிறது' எனப் புலம்பினார்.

இந்தப் புலம்பலுக்கு நடுவே, 'மாநிலத் தலைவராக அண்ணாமலையை மீண்டும் கொண்டுவர நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...' என சிலர் பேசவும், தமிழிசை செளந்திரராஜன், பொன்னார், அரவிந்த் மேனன் போன்றவர்கள் டென்ஷனாகிவிட்டனர். 'கட்சியோட அடிமட்ட தேர்தலையே இன்னும் நாம முழுசா நடத்தி முடிக்கல. அதுக்குள்ள மாநிலத் தலைவர் தேர்தலைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களா... தலைமை யார் பெயரைச் சொல்கிறதோ, அவரையே மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதுக்குள்ள இங்க பிரசாரத்தை ஆரம்பிச்சுறாதீங்க..' எனக் கடுகடுத்தனர். அமைதியாக இருந்த அண்ணாமலை, 'முதல்ல, மண்டல் தலைவர் தேர்தலை நடத்தி முடிப்போம். யார், யாருக்கு உரிய அங்கீகாரம் தரணும்ங்கறதை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும்' என்று பேசி கூட்டத்தை முடித்தார். இப்போதிருக்கும் பிரச்னையில், மண்டல் தலைவர் பதவிகளை நிரப்புவதில்தான் டெல்லியின் முழு கவனமுமே இருக்கிறது" என்றனர் விரிவாக.

அண்ணாமலை - தமிழிசை

"அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் வாய்ப்பு அளிக்கப்படுமா?" என்கிற கேள்விக்கு, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவர் நம்மிடையே பேசுகையில், "அதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. முன்புபோல டெல்லியில் செல்வாக்குடன் அண்ணாமலை இல்லை. பிரதமராக மோடி பதவியேற்றபிறகு, ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்து அண்ணாமலை பேசவில்லை. அதற்கான வாய்ப்பையும் மோடி தரவில்லை. பலமுறை டெல்லிக்கு அண்ணாமலை சென்றிருந்தபோதுகூட, அவரை அமித்ஷா அழைத்துப் பேசவில்லை. அண்ணாமலைக்கு நெருக்கமான தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்கூட, முன்புபோல அவருடன் நெருக்கமாக இல்லை. ஆனாலும், மீண்டும் தலைவராக கடுமையாகவே முயற்சிக்கிறார் அண்ணாமலை. கர்நாடகா மடத்தின் ரூட்டில் டெல்லியில் பலமாகவே முட்டி மோதுகிறார்.

இதற்கிடையே, அண்ணாமலைக்கும் டெல்லிக்கும் இடையே விழுந்த விரிசலை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மாநிலத் தலைவராகக் கடுமையாகவே முயற்சிக்கிறார் தமிழிசை செளந்திரராஜன். நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி.செல்வம், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்களும் தலைவர் பதவிக்கு காய் நகர்த்துகிறார்கள். மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்ப மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விரும்பவில்லை. தனக்குக் கிடைக்கவில்லை என்றால், தலைவர் பதவியை தன் ஆதரவாளரான ஏ.பி.முருகானந்தத்திற்குப் பெற்றுக் கொடுக்க அண்ணாமலையும் தயாராகிறார் என்ற தகவலும் ஓடுகிறது. மண்டல் தலைவர், மாவட்டத் தலைவர் பதவிகள் இம்மாதம் இறுதியாகிவிடும். அதன்பின்னர்தான், மாநிலத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் நடைபெறும். வரும் ஜனவரி மத்தியில்தான் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரையில், இந்த ஆடுபுலி ஆட்டம் ஓயாது" என்றார்.

ஏ.பி.முருகானந்தம், வானதி சீனிவாசன், அண்ணாமலை

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருப்பதால், புதிதாக ஒரு மாநிலத் தலைவரை நியமித்து, அவர் தலைமையில் தேர்தலைச் சந்திக்க யோசிக்கிறது டெல்லி. அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் அரியாசனத்தைப் பிடித்துவிட கணக்குப் போடுகிறார் அண்ணாமலை. அதேவேளையில், 'அண்ணாமலையால்தான் அ.தி.மு.க கூட்டணி கையைவிட்டுப் போனது. அவரால் வெற்றியைத் தேடித் தர முடியவில்லை. இங்கே மோடியின் முகத்திற்குத்தான் ஓட்டே தவிர, அண்ணாமலைக்கு அல்ல..' என டெல்லியில் சிண்டு முடிகிறது ஒரு அணி.

யார் போடும் கணக்கு விடையளிக்கப் போகிறது என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.


from India News https://ift.tt/x13ysui

Post a Comment

0 Comments