நியூ யார்க் டைம்ஸ் தலையங்கம்..
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸிக்கும் இடையேயான போட்டியில் யார் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான `நியூ யார்க் டைம்ஸ்', டிரம்ப் ஒரு பொய்யர், பாசிசவாதி, அமெரிக்க அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர் என கடுமையாக விமர்சித்து கட்டுரைகளையும் தலையங்கத்தையும் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக..
`நியூ யார்க் டைம்ஸ்'-ன் ஆசிரியர் குழுவினர் வெவ்வேறு தலைப்புகளில் வெளியிட்டிருக்கும் கட்டுரைகளில், டிரம்ப்பின் குணாதிசயங்கள் பற்றி அவர் நண்பர்கள், நெருங்கியவர்கள், கடந்த ஆட்சியில் உடன் பணியாற்றியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் பகிரங்கமாக பதிவு செய்திருப்பதோடு, தன்னுடைய நிலைப்பாட்டையும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, நியூ யார்க் டைம்ஸின் (THE EDITORIAL BOARD) எடிட்டோரியல் போர்டு வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில், ``டொனால்ட் டிரம்பை உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவர் நாட்டை வழிநடத்த தகுதியற்றவர். அவரைக் கவனித்துப் பாருங்கள். அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேளுங்கள். அவர் தேர்தலைத் தகர்த்தெறிய முயற்சிக்கிறார்; எப்போதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறார். தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு அவரின் ஊழலும் சட்டவிரோத செயல்பாடுகளுமே அவரின் முழு நெறிமுறையாக இருக்கின்றன.
அவர் எல்லையில்லாமல் பொய் சொல்கிறார். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியரசு கட்சியால் கூட (GOP -Grand Old Party) அவரைத் தடுக்க முடியாது. ட்ரம்ப் எதிர்ப்பாளர்களைப் பிடிக்க அரசாங்கத்தைப் பயன்படுத்துவார். வெகுஜன நாடுகடத்தல் என்ற கொடூரமான கொள்கையை அவர் பின்பற்றுவார். அவர் ஏழைகள், நடுத்தர வர்க்கம் மற்றும் முதலாளிகள் மீது பேரழிவை ஏற்படுத்துவார். டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றால் அவரின் இந்தப் பதவிக்காலம் காலநிலையை சேதப்படுத்தும், கூட்டணிகளை சிதைக்கும்; ஏதேச்சதிகார அடக்குமுறை போக்கை வலுப்படுத்தும். அமெரிக்கர்கள் தங்கள் டிமான்டை இன்னும் பெட்டராக தேர்ந்தெடுக்கவேண்டும். சிந்தித்து வாக்களியுங்கள்" என்று தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டொனால்ட் டிரம்பின் குணாதிசயங்கள்
அதேபோல, நியூ யார்க் டைம்ஸின் `Trump’s Wild Claims, Conspiracies and Falsehoods Redefine Presidential Bounds, What I Truly Expect if an Unconstrained Trump Retakes Power, All the Demons Are Here' உள்ளிட்டப் பல்வேறு கட்டுரைகள் டிரம்ப்பின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டிருக்கின்றன.
குறிப்பாக அந்தக் கட்டுரைகளில், ``டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மோசமான அத்தியாயங்களின் அடுக்குகளால் குறிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவரது பொது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கின்றது. டிரம்பிற்கென்ற எந்தவொரு சிறந்த குணாதிசயங்களும் இல்லை. டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும், வெள்ளை மாளிகையை மீண்டும் வெல்வதற்கான பிரச்சாரப் பாதையில் இருந்ததை விட, தனது தேவைகளை நிறைவேற்ற உண்மைகளை தனக்கு சாதகமாக வளைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். ட்ரம்பின் காட்டுமிராண்டித்தனமான கூற்றுக்கள், பொய்கள், சதி வேலைகளெல்லாம் ஓர் அதிபரின் எல்லைகளையே மறுவரையறை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமானவைகளாக இருந்திருக்கின்றன.
குடியரசுக் கட்சி..
ஒரு காலத்தில், நமது தலைவர்களின் குணாதிசயமும் நற்பெயரும் மதிக்கப்பட்டன. `குணம் ஒரு மரம் போன்றது, புகழ் ஒரு நிழல் போன்றது' என்று லிங்கன் கூறினார். அமெரிக்காவை கட்டமைத்த, நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்கா ஒருபோதும் பொய் சொன்னதில்லை; அப்படியிருக்க... எப்படி ஒரு நற்பெயர் இல்லாத ஒரு மனிதனை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கும் இடமாக அமெரிக்கா மாறியது? பாசாங்குத்தனம், சுய முன்னேற்றம், மோசமான தீர்ப்பு ஆகியவற்றால் நிரம்பிய ஒரு ஆளும் வர்க்கத்தை டிரம்ப் தனக்காகப் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவர் தனது சொந்த நலனுக்காக குடியரசுக் கட்சியை மறுசீரமைக்கிறார். டிரம்பின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளுக்கு அவமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. டிரம்ப் செய்யும் ஒவ்வொரு கெட்ட காரியங்களையும் தனது போட்டியாளர்களுக்கு எதிராக வெட்கமின்றி முன்வைத்து பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.
டிரம்ப் பற்றிய மதிப்பீடுகள்..
டிரம்ப் மனித நல்லொழுக்கங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர் காட்டில் மிகப்பெரிய மிருகமாக இருக்க விரும்புகிறார்; அவர் விரும்பும் எதையும் எடுத்துக்கொள்ள நினைக்கிறார். அதற்கு எந்த வழிமுறைகளையும் பின்பற்றுகிறார். அவருக்கென்று எந்த தத்துவமும் இல்லை; அவரது வாழ்க்கை தொடர்ச்சியின் புத்தகத்தில் அடங்கியிருப்பது சுயநலம் மட்டுமே. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வெகுமதி அளிப்பது, தனது எதிரிகளை எவ்வாறு தண்டிப்பது என்ற வெறியிலேயே திரிகிறார். மக்களை ஒருவருக்கொருவர் எதிராக எப்படி நிறுத்துவது என்று சதித்திட்டம் தீட்டுகிறார்.
டிரம்புடன் நெருக்கமாக பணியாற்றிய முக்கிய தளபதிகளின் மதிப்பீடுகளின்படி, அவர் ஒரு பாசிசவாதி. கமலா ஹாரிஸ் கூறுவதுபோல் டொனால்ட் டிரம்ப் ஒரு முரட்டுத்தனமான மனிதர். அவர் அமெரிக்காவை பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்; தன்னை எதிர்க்கும் தாராளவாதிகளை `கிருமிகள்' என்று அழைக்கிறார். கருக்கலைப்பு செய்வதில் பெண்களை மீண்டும் பின்னோக்கிய வழித்தடத்துக்குத் தள்ளிவிடுகிறார்.
புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்பு..
புலம்பெயர்ந்தோர்மீது வெறுப்பை உமிழ்கிறார். புலம்பெயர்ந்தோரை ``மக்கள் அல்ல.. அவர்கள் நம் நாட்டின் ரத்தத்தை நச்சுப்படுத்த வந்தவர்கள்" என்று கூறுகிறார்கள். அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தும்கூட, ``புலம்பெயர்ந்த குற்றவாளிகள் நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமித்த ராணுவத்தைப் போல கைப்பற்றுகிறார்கள்" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய உள்நாட்டு நாடுகடத்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். பொது இடங்களில் சோதனைகளை மேற்கொள்ள அனுப்புவது, பல அங்கீகரிக்கப்படாத புலம்பெயர்ந்தோரை ஒரே நேரத்தில் கைது செய்வதை நோக்கமாகக் கொள்வது, புதிதாக கட்டப்பட்ட சிறை முகாம்களில் அவர்களை அடைப்பது உள்ளிட்டக் கொடுமையாக நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்.
டொனால்டு டிரம்ப் கையில் ஆட்சி கிடைத்தால்...
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், ஹிலாரி கிளிண்டன் மீது வழக்குத் தொடர அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸை கட்டாயப்படுத்தி, தொந்தரவு செய்தார். டிரம்பும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையின் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்கள் நோக்கம் குறித்து தெளிவாக இருக்கின்றனர். அவர் கையில் இரண்டாவது முறையாக ஆட்சி கிடைத்தால், அவரது கூட்டாளிகள் நீதித்துறை, கல்வித் துறை, சம வேலைவாய்ப்பு வாய்ப்பு ஆணையம் உள்ளிட்ட ஏஜென்சிகளின் அதிகாரங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்த முனைவார்கள். எனவே, அரசாங்கத்தின் மீது அக்கறை கொண்ட மக்களால் நடத்தப்பட்டால் மட்டுமே அரசாங்கம் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்த முடியும்" என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது.
from India News https://ift.tt/noBDk09
0 Comments