ஒன் பை டூ

சைதை சாதிக்

சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க

“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயர் அவர். 2001-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் அம்மையார் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே, இரண்டாவது முறையாக மேயரானார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அமைச்சர், துணை முதல்வர் எனப் படிப்படியாகப் பொறுப்புகளை அடைந்தவர் அவர். அந்த வெற்றிகளெல்லாம் கலைஞர் மகன் என்பதற்காகக் கிடைத்ததல்ல... ‘மக்களை நோக்கிச் செல்...’ என அண்ணா பாணியில் கடும் உழைப்பைக் கொடுத்ததால் கிடைத்த பொறுப்புகள் அவை. இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதெல்லாம் கூவத்தூர் குறுக்குவழியில் வந்த எடப்பாடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதுகெலும்பில்லாமல் தரையில் விழுந்து, பிறர் கால்களைப் பிடித்துப் பதவியைப் பெற்ற பழனிசாமி, காலாவதியான காலத்தில் ஒன்றும் புரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்!”

சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“எடப்பாடியார் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அண்ணா ஆரம்பித்த கட்சியைக் கைப்பற்றி, தனது குடும்பச் சொத்தாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி. தனக்குப் பிறகு தன்னுடைய மகன் ஸ்டாலின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று, அவரை சென்னையின் மேயராக்கினார். பிறகு துணை முதல்வராக்கி அழகு பார்த்தார். ‘கருணாநிதியின் மகன்’ என்ற அடையாளம் இல்லையென்றால், ஸ்டாலினின் தகுதிக்கு கவுன்சிலர் என்ன... கிளைச் செயலாளர்கூட ஆகியிருக்க மாட்டார். மேடைக்கு மேடை கருணாநிதி புகழ் பாடியதைத் தாண்டி, இவரின் ஆட்சியில் மக்களுக்கான எந்த நல்ல திட்டம் வந்திருக்கிறது... குடும்ப உறுப்பினர்களுக்காக ஆட்சியையும், குடும்பச் சொத்தாகக் கட்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் இரண்டையும் காப்பாற்ற, தன்னுடைய மகனையும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். கூண்டோடு இவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவதை நாம் பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!”



from India News https://ift.tt/IrXbdyW

Post a Comment

0 Comments