நடிகர் விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.
மாநாட்டு திடல் அமைப்பதற்காக அங்கிருக்கும் வி.சாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம், த.வெ.க-வினர் நிலங்களை பெற்று வருகின்றனர். அப்படி அந்த பகுதியைச் சேர்ந்த வயசான விவசாய தம்பதியான ராதாகிருஷ்ணன் – ராஜாமணி, தங்களின் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை மாநாட்டு நிகழ்வுக்காக வழங்கினர். அப்போது, `எங்களுக்கு வயதாகிவிட்டதால் இப்போது விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால் எங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்’ என்று ராதாகிருஷ்ணனும், ராஜாமணியும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
அந்த வயதான தம்பதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஜய் ரசிகரும், திருவள்ளூர் மாவட்ட த.வெ.க நிர்வாகியுமான எம்.டி மணி என்பவர், அவர்களுக்காக கன்றுடன் கூடிய பசு ஒன்றை வாங்கிக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார். ரூ.36,000 மதிப்புள்ள அந்த பசுவை த.வெ.க-வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து, ராதாகிருஷ்ணன், ராஜாமணி தம்பதிக்கு வழங்கினார்.
இதுகுறித்துப் பேசிய அந்த தம்பதி, ``எங்கள் இருவருக்கும் வயதாகிவிட்டது. அதனால் முன்போல எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால் ஒரு மாடு இருந்தால், எங்கள் பிழைப்பை ஓட்டிக் கொள்வோம் என விஜய் கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தேன். அவர்கள் வாங்கிக் கொடுத்திருக்கும் மாடு எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்றனர்.
from India News https://ift.tt/bqmcfas
0 Comments