கனடா மண்ணில் நடந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மந்தீப் சிங் நிஜார் கொலைவழக்கில் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் வலிமையான ஆதாரம் தங்களிடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
ஒட்டாவாவில் உள்ள 'கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில்' (Federal Electoral Processes and Democratic Institutions) வெளிநாட்டு தலையீடு பற்றிய பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போது, ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஒரு குருதுவாரா வெளியே ஹர்மன்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியா - கடனா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த கொலையில் 'இந்திய ஏஜெண்ட்'களுக்குத் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
நிஜார் கொலையில் இந்திய தலையீடு இருப்பது குறித்து, "இப்போதுவரை இது உளவுத்துறை தகவலாக மட்டுமே இருக்கிறது, உறுதியான ஆதாரங்கள் இல்லை" என்றுக் கூறியிருக்கிறார். அதேவேளையில் தன்னிடம் நம்பகத்தன்மை வாய்ந்த சில ஆதரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு முதலில் குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக இருக்கலாம் என எண்ணியதாகவும், அதனால் இந்திய உளவுத்துறையினர் அதைப் பின்னர் பார்க்கலாம் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால் சில தெற்காசிய எம்.பிக்கள் இது இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறியதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்த தெற்காசிய எம்.பி யார் என ட்ரூடோ தெரிவிக்கவில்லை.
"மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கனடர்கள் பற்றிய தகவல்கள் இந்தியாவில் உயர்மட்ட அதிகாரம் கொண்ட நபர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் வழியாக லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற கும்பல்களுக்கு அந்த தகவல் பகிரப்பட்டு இறுதியில் கனட மண்ணில் வன்முறையாக முடிந்திருக்கிறது" என்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
"கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் சமயத்தில் கனடா உளவுத்துறை அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் நிஜார் கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கவலை இருப்பதாக தெரிவித்தனர்" என்றார் கனடா பிரதமர்.
நிஜார் கொலையில் இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடும் என்று கனடா பிரதமர் கடந்த செப்டம்பர் மாதம் பேசியது, இந்தியா - கனடா உறவை வெகுவாக பலவீனப்படுத்தியது. ஆனால், இந்தியா அவரது அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுத்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் இந்திய தூதரகம் நிஜார் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்தியா அதன் தூதரக உயர் ஆணையரை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் இந்தியாவில் இருந்த ஆறு கனடா தூதரக அதிகாரிகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டது.
நிஜார் கொலை வழக்குடன் இந்தியாவை இணைக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும், கனடா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இத்தகைய குற்றச்சாட்டுக்களை வைக்கிறார் என்றும் இந்தியா குற்றம்சுமத்தியிருக்கிறது.
from India News https://ift.tt/0y9RleK
0 Comments