மும்பையில் போட்டியிடும் தமிழர்கள்..
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போட்டி வேட்பாளர்களாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்களை போட்டியில் இருந்து விலகும்படி கூறி கட்சிகள் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மும்பையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரவி ராஜா தனக்கு சயான் கோலிவாடா தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அத்தொகுதியில் மீண்டும் கணேஷ் குமாருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இத்தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் தமிழ் செல்வமும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மும்பையில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழர்கள் இரண்டு பேரும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். சயான் கோலிவாடா தொகுதியில் ஏற்கெனவே கேப்டன் தமிழ் செல்வம் பா.ஜ.க சார்பாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு பா.ஜ.க மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
பாஜகவில் சேர்ந்த ரவி ராஜா..
இதே தொகுதியில் காங்கிரஸ் கவுன்சிலராகவும், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் ரவிராஜா. இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிக்கிறார். எந்நேரமும் தமிழர்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் தூரத்தில் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டு இருந்தார். ஆனால் கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கணேஷ் குமாருக்கே காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. கணேஷ் குமார் மும்பையில் உள்ள அரோரா தியேட்டர் உரிமையாளர் மகன் ஆவார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இளைஞரணி தலைவராகவும் இருந்தவர். தற்போது சீட் கிடைக்காத அதிருப்தியில் திடீரென பா.ஜ.கவில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ரவி ராஜா பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டார்.
பாஜக-வுக்கு சாதகம்...
அவர் கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு மும்பை பா.ஜ.க துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலை கருத்தில் கொண்டு இப்போது ரவி ராஜா கட்சி மாறி இருக்கிறார். 1980-வது ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த ரவி ராஜா அக்கட்சியில் இருந்து விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அதோடு ரவிராஜா பா.ஜ.கவில் இணைந்திருப்பதால் பா.ஜ.க வேட்பாளர் தமிழ் செல்வத்தின் வெற்றி எளிதாகி இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை..
இதே போன்று கோலாப்பூர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயஸ்ரீ ஜாதவ் தனக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துவிட்டார். ஜெயஸ்ரீ ஜாதவும், அவரது மகன் சத்யஜித்தும் சிறப்பு ஹெலிகாப்டரில் கோலாப்பூரில் இருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் சேர்ந்தனர். காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருப்பவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விதர்பாவில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
காங்கிரஸில் 100 அதிருப்தி வேட்பாளர்கள்..
இதே போன்று மராத்வாடாவில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களிடம் அமித் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காங்கிரஸில் 100 அதிருப்தி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அவர்களில் 20 முதல் 25 பேர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வெற்றியை தடுக்ககூடிய வகையில் செல்வாக்குள்ளவர்களாக இருக்கின்றனர்.
இதே போன்று பா.ஜ.க கூட்டணியிலும் அதிக அளவில் அதிருப்தி வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதிருப்தி வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். செல்வாக்குள்ள அதிருப்தி வேட்பாளர்களுடன் பேசி தீர்வு எட்டப்படும் என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.
நாசிக் பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரா ஷீரடி தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை கட்சி தலைமை சிறப்பு விமானத்தில் மும்பைக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி கேட்டுக்கொண்டது.
ஷீரடி தொகுதியில் பா.ஜ.க சார்பாக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் போட்டியிடுகிறார். ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தோல்வி அடையவேண்டும் என்பதற்காகத்தான் இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக ராஜேந்திரா குறிப்பிட்டார். கடந்த தேர்தலில் ராஜேந்திராவை ராதாகிருஷ்ண விகே பாட்டீல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
from India News https://ift.tt/RWgjGb7
0 Comments