மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுகிறது. மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு தொகுதியில் அக்கட்சி கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து வெற்றி பெற்று வருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.கவை தவிர வேறு எந்த கட்சியாலும் 30 ஆண்டில் வெற்றி பெற முடியவில்லை. காட்கோபர் கிழக்கு தொகுதியில் குஜராத்தியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். அவர்கள் தான் பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
இத்தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேதி பில்டர் பராக் ஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மகாராஷ்டிராவின் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார். முதல் முறையாக கடந்த முறை போட்டியிட்ட போது 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியை எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது. சரத் பவார் இத்தொகுதியில் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் என்ற மராத்தி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்.
இத்தொகுதியில் குஜராத்தியர்கள் அதிகம் இருந்தாலும், மராத்தி வாக்குகளும் ஒரு லட்சம் வரை இருக்கிறது என்று கூறுகிறார் ராக்கி ஜாதவ். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''காட்கோபர் கிழக்கு தொகுதியில் குஜராத்தியர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுவது தவறு. கணிசமான அளவு மராத்தியர்களும், வட இந்தியர்களும் இருக்கின்றனர். முந்தைய தேர்தல்களில் வாக்குகள் 3 அல்லது 4 கட்சிக்கு பிரிந்து வாக்கு விழுந்தது. குஜராத்தி ஓட்டு அப்படியே பா.ஜ.க-வுக்கு கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. பா.ஜ.க தங்களை வெறுமனே பயன்படுத்திக்கொள்வதாக குஜராத்தியர்கள் நினைக்கின்றனர். நான் இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவேன். இதன் மூலம் காட்கோபரில் உண்மையான வளர்ச்சியை கொண்டு வருவேன்''என்றார்.
இத்தொகுதியிக்கு மீண்டும் பராக் ஷாவை நிறுத்த பா.ஜ.க தயக்கம் காட்டி வந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.பிரகாஷ் மேத்தா இத்தொகுதியில் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தார். இதனால் வேட்பாளரை அறிவிப்பதில் கடைசி வரை பா.ஜ.க தாமதம் செய்து வந்தது. வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளில்தான் பராக் ஷாவை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்தது. இது குறித்து பராக் ஷா கூறுகையில், ''கடந்த முறை பெற்றதை விட இம்முறை 10 சதவீத வாக்குகள் அதிகமாக பெறுவேன். கடந்த 5 ஆண்டில் 18 ஆயிரம் குடிசைவாசிகளுக்கு மாற்று வீடு கிடைக்க உதவி செய்து இருக்கிறேன்'' என்றார். காட்கோபர் கிழக்கு தொகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் பிரபலம் அடைந்து வருகிறது. அதேசமயம் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது. சாலையில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
575% சொத்து அதிகரிப்பு
பா.ஜ.க சார்பாக போட்டியிடும் பராக் ஷா கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தனது சொத்து 550 கோடி என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டில் பராக்ஷாவின் சொத்து 3,383 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதனை பராக் ஷா தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டில் சொத்து 575 சதவீதம் சொத்து அதிகரித்து இருக்கிறது. இது குறித்து பராக் ஷாவிடம் கேட்டதற்கு, ''நான் நேர்மையானவன். எனது எதிரியிடம் கேட்டால் கூட நான் நேர்மையற்றவன் என்று சொல்லமாட்டார்கள். பலரிடம் சொத்து இருக்கிறது. எனது சொத்தை நல்ல வழியில் பயன்படுத்துகிறேன். கடவுள் எனக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறார். நான் தலைவர், தொழிலதிபர், சமூக சேவகர். எனது 50 சதவீத சேமிப்பை சமூக சேவைக்காக பயன்படுத்துகிறேன்'' என்றார். பராக் ஷா 25 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஆனால் எம்.எல்.ஏவாக மாறிய பிறகுதான் 5 ஆண்டில் சொத்து 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/e4CWjwH
0 Comments