இன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற 'விமான சாகச நிகழ்ச்சி' (Air show) நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலிலும் போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கித் தவித்தது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மெரினாவில் ஒன்று கூடியதால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கும் நகர முடியாத நிலை என மக்கள் தவித்துப் போய் கடும் வெயிலில் நின்றனர். ரயில், மெட்ரோ, பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் நிலை ஏற்பட்டிருகிறது. ஒரு ரயிலுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடிநீர், சரியான திட்டமிடல், லட்சக்கணக்கான மக்கள் திரும்பி செல்வதற்கான ஏற்படுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கம் காரணமாக பலர் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அந்நிகழ்ச்சிக்குச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் முறையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், சரியான முன் ஏற்பாடுகள் இல்லை, அரசு இதில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என தங்களது மனக் குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் 'தமிழ்நாடு அரசு கவனக் குறைவுடன் நடந்துகொண்டது' என விமர்சனம் செய்து பேசியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திட தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற 'விமான சாகச நிகழ்ச்சி'யில் அரசின் ஏற்பாடுகள் குறித்த உங்களது கருத்தைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/aSKn10x
0 Comments