RN Ravi: "மாநில பாடத்திட்டத்தில் தரம் இல்லையா?" - ஆளுநர் ரவியின் கருத்திற்கு எழும் பதிலடிகள்!

"மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது" என்று பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு, "மாநில கல்வித் திட்டம் குறித்து ஆய்வுசெய்ய விரும்பினால், மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்துக்கொள்ளட்டும்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கவர்னர் ஆர்.என். ரவி

சென்னையில் நடைபெற்ற தனியார்ப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கும் நவீனத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்." என்றார். 

"ஆளுநரின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்" என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், "மாநில பாடத்திட்டத்தின் தரம் கீழ் நிலையில் இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வாபஸ் பெற வேண்டும்." என்று பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அன்பில் மகேஷ்

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆளுநரின் பேச்சு, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தனியார் நடத்தும் மத்திய பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் தந்திரச் செயலும் கூட என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

“மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்?” என்ற கேள்வியை பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு எழுப்புகிறார். மேலும், “மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் அவர் ஒப்பாய்வு செய்தார்? தரத்தை அளப்பதற்கு என்ன அளவுகோலை ஆளுநர் பயன்படுத்தினார்? மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால், தான் ஆராய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா?..” எனப் பல கேள்விகளை பிரின்ஸ் கஜேந்திரபாபு முன்வைக்கிறார்.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி அடிப்படையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டில் தரமான பாடத்திட்டம் என்று கல்வியாளர்களால் அது பாராட்டப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், "தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது" என்ற வாதத்தை நிராகரித்தது. மாநில பாடத் திட்டத்தைத் தமிழக அரசு தொடர்ந்து செழுமைப்படுத்தி வருகிறது.  

பள்ளி மாணவர்கள்

பல புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, தமிழ்நாடு மாநில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சிறுமைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கல்வியாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

2021-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகப் பிரச்னை வெடித்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று." என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாநில பாடத்திட்டம் குறித்த ஆளுநரின் கருத்துக்குப் பதிலளித்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தைவிட மாநிலப் பாடத்திட்டம் மேலானது. மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. போட்டித் தேர்வுகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மாநில புத்தகங்களிலிருந்துதான் டி.என்.பி.எஸ்.சி பயில்வோர் பயன்பெறுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் ஆளுநர் நேரில் சென்று பேச வேண்டும்.

அரசுப் பள்ளி

மாநில பாடத் திட்டத்தைப் படித்து எத்தனை பேர் அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தேர்வாகின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டு ஆளுநர் பேச வேண்டும். மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களே தமிழ்நாட்டில் உள்ள 6 - 12 வகுப்பு பாடப் புத்தகங்களைத்தான் படிக்கின்றனர். கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால் ஆளுநரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயார்" என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தயாரா?



from India News https://ift.tt/CUXauPQ

Post a Comment

0 Comments