நெல்லை மாநகர தி.மு.க சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சிகாகோவில் முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். அமெரிக்காவில் தினமும் நடக்கும் முதல்வரின் நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா? அவரது கண் குருடு போலத் தெரிகிறது.
நெருக்கடியில் இருக்கும் அவர், முதல்வர் குறித்து இவ்வாறு கருத்துகளைக் கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர்கள், அவரை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற பதற்றம் ஏற்பட்டுவிட்டது. அதனால், என்ன பேச வேண்டும் எனத் தெரியாமல் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். முதல்வர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது அன்றாட அமெரிக்க நிகழ்வுகளை அனைவரும் பார்த்து வருகின்றனர். அமெரிக்கா சென்று முதல்வர் சென்னை திரும்பியதும் ஊடகங்களைச் சந்தித்து முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாகப் பேசுவார்.
எதையும் மூடி மறைக்கும் பழக்கம் தி.மு.க-விற்கு கிடையாது. சட்டம்- ஒழுங்கு என தி.மு.க மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் வழக்கமான குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான். மணிப்பூர், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள சம்பவத்தை விட தமிழகத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அ.தி.மு.க ஆட்சியை விட தி.மு.க ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகத்தின் அறிக்கை சொல்கிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் அரசு கஜானாவை காலி செய்ததாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஆனால், ஆசியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழ்நாட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் இப்படியெல்லாம் நடத்த முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.” என்றார்.
from India News https://ift.tt/LfZDWEu
0 Comments