திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தான்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டடம். தற்போது இந்த நூலகம் பொலிவிழந்து எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல் பூட்டியபடி காட்சியளிக்கிறது.
2010 - 11-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகத்தை நேரில் சென்று பார்த்தபோது எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல், வாசலில் கீற்று கட்டு போட்டு அடைக்கப்பட்டும் பூட்டுப் போட்டு பூட்டியபடியும் இருந்தது. மேலும் இந்த நூலகத்திற்குள் பல புத்தகங்கள் அலமாரியில் அடுக்கியபடி வெறுமனே அலங்கரிக்கப்பட்டு பயன்பாடு இன்றி இருந்தன.
இது குறித்து போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அவ்வூரைச் சேர்ந்த ஒரு மாணவரிடம் கேட்டபோது, ``நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். இந்த லைப்ரரி ரொம்ப நாளாவே பராமரிப்பின்றி பூட்டி இருக்குது. காம்பிடேட்டிவ் எக்ஸாம்'க்கு வீட்ல உட்கார்ந்து படிக்க முடியாது. ஏனா வீட்ல அது இதுன்னு வேலை சொல்லுவாங்க.
அந்த சமயத்துல அமைதியான ஒரு இடத்த தேட வேண்டி இருக்கும். அந்த இடமும் மக்கள் நடமாட்டத்தால படிக்க முடியாதபடி போய்டும். நாங்க வசிக்கக் கூடியது கிராமப்புறம், இங்க அப்படி இப்படித்தான் இருக்கும். இந்த லைப்ரரி சம்பந்தமா பிரசிடென்ட்' கிட்டயும், கிராம சபா கூட்டத்திலும் நாங்க கேட்டு பாத்துட்டோம். ஆனா அந்த கூட்டத்துல இந்த லைப்ரரி' க்கு உண்டான செலவு மட்டும் காட்டுவாங்க. அந்த செலவு பாத்தா, இந்த லைப்ரரி' க்கும் அந்த செலவு'க்கும் சம்பந்தம் இருக்காது.
அது மட்டுமல்லாம இந்த லைப்ரரி'க்கு பக்கத்துலயே ஒரு மிடில் ஸ்கூல் ஒன்னு இருக்கு, இந்த லைப்ரரிய தொறந்தா அந்த ஸ்கூல்ல படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் படிக்க ஆர்வம் காட்டுவாங்க. இந்த அவசர உலகத்துல லைப்ரரி'க்கு போயி படிக்கிறது குறைஞ்சுகிட்டு இருக்குனு தான் நம்ம கவர்ன்மென்ட் நடமாடும் நூலகம் அப்படிங்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்காங்க, இத இந்த லைப்ரரியோட கம்பேர் பண்ணி பாத்தா வருத்தமா இருக்கு... இந்த லைப்ரரி கூடிய விரைவுல திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இது குறித்து அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் நேரில் சென்று விசாரித்தபோது, ``அந்த லைப்ரரி 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. எனவே அதை புனரமைக்க தீர்மானம் எழுதி கோட்டூர் BDO ஆபீஸில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த நூலகம் சார்பாக கிராம சபா கூட்டத்தில் ஒரு கணக்கும் காட்டப்படவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து கோட்டூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றோம், முடியவில்லை..!
அதையடுத்து, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை அதிகாரி மணிமாறனிடம் நேரில் சென்று, இது குறித்து கேட்டபோது, "நீங்கள் கூறிய பஞ்சாயத்தின் பெயர்களை எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்புங்க சார். நான் திங்கள்கிழமை வேண்டிய தகவல்களை தருகிறேன்" என்று கூறினார். திங்கள்கிழமை கழிந்து பேசியபோது, ``உங்களுக்கு கோட்டூர் BDO நம்பர் தரேன். அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்"
இதைத் தொடர்ந்து கோட்டூர் BDO-வை அழைத்தபோது, நமது அழைப்பை ஏற்கவில்லை!
மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் பயன்பெறும் வகையில், நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
from India News https://ift.tt/XifH4Jy
0 Comments