செந்தில் பாலாஜி விடுதலை: முடிவுக்கு வருகிறதா அமைச்சரவை மாற்றத்துக்கான காத்திருப்பு?

முடிவுக்கு வந்த சிறைவாசம்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். அன்றைய தினம் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட,

ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு இருதய ரத்த நாளத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

சிகிச்சையிலிருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தனியார் மருத்துவமனையிலிருந்து சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் குழு ஜாமீன் கேட்டு நீதிமன்ற படியேறியது. சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை ஜாமீன் மனுவை நிராகரித்தன. கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது செந்தில் பாலாஜி தரப்பு. தொடர்ந்து பல மாதங்களாக நீதிமன்றத்தில் இரண்டு தரப்பு வாதங்களும் நடைபெற்று வந்தன. கடைசியாக பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

வெளியே வந்த செந்தில் பாலாஜி!

"வாரத்தில் இரண்டு முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்துப் போடவேண்டும். மாதத்தின் முதல் சனிக்கிழமையில் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகவேண்டும். ஜாமீனுக்கு முன்பாக தனது பாஸ்போர்ட்டை தாக்கல் செய்யவேண்டும். இரண்டு பேர் 25 லட்சம் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்கவேண்டும். சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்யக்கூடாது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இல்லையென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும்" என்ற கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம். 26-ம் தேதி காலையிலேயே ஜாமீன் வாங்கியிருந்தாலும், நீதிமன்ற உத்தரவு பதிவேற்றம் மதியத்திலேயே நடந்தது.

செந்தில் பாலாஜி

அடுத்ததாகச் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோர் ஜாமீன் உத்தரவாதம் கொடுத்து, தங்கள் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், மாலை 5.45-க்கு செந்தில் பாலாஜிக்குப் பிணை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். கடைசியாக நீதிமன்ற உத்தரவு சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்கு அனைத்து நடைமுறைகளும் நடத்தப்பட்டன. மாலை 7.15 மணிக்குச் சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் வெடி வெடித்து, மாலை அணிவித்து மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு வழங்கினர். திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தார்.

முடிவுக்கு வரும் மாற்றம்!

திமுக-வில் அமைச்சரவை மாற்றம் இருக்கிறது, துணை முதல்வர் அறிவிப்பு வருகிறது என்று தொடர்ந்து பேசப்பட்டது. இருந்தபோதிலும் திமுக தலைமை சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி வெளியே வருவதற்காகக் காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "அமைச்சரவை மாற்றமும் சரி, துணை முதல்வர் அறிவிப்பும் சரி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அமைச்சரவையில் ஒரு சிலரை வெளியே எடுப்பது, புதியவர்களை உள்ளே சேர்ப்பது குறித்து இரண்டு முறை லிஸ்ட் முதல்வருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அந்த லிஸ்டில் முதல்வருக்கு உடன்பாடில்லை. கடைசியாக முதல்வர் தரப்பு ஒரு லிஸ்டை தயாரித்திருக்கிறது. அதில் ஒருசில மாற்றங்கள் நிச்சயமாக நாம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். அதேபோல, துணை முதல்வர் அறிவிப்பைப் பொறுத்தவரை சீனியர்கள் சிலரைச் சமாதானப்படுத்த வேண்டியதிருந்தது. இவை எல்லாவற்றையும் தலைவர் ஸ்டாலின் செய்து முடித்திருக்கிறார். அனைத்தையும் தாண்டி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி வருகைக்காகவே முதல்வர் காத்திருந்தார். ஜாமீன் கிடைத்ததும் 'உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!' என்ற முதல்வரின் பதிவிலேயே அதனைப் புரிந்து கொள்ளலாம்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி சிறையிலிருந்தாலும், கோவை நாடாளுமன்ற வேட்பாளர் தேர்விலும் சரி, கோவையில் மாற்றப்பட்ட மேயர் தேர்விலும் சரி செந்தில் பாலாஜியின் கைதான் ஓங்கியிருந்தது. முதல்வர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காத நிலையில் அவர் வரட்டும் என்று காத்திருந்தது திமுக தலைமை. இப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்துவிட்டார். அவர் தரப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த பட்டியலும் தயாராகிக்கொண்டிருக்கிறது. வரும் சனிக்கிழமை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவளவிழா நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கு முன்பாக முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார். எனவே பவளவிழா நிகழ்ச்சி முடிந்ததுமே அடுத்த ஓரிரு தினத்தில் அறிவிப்புகள் வெளியாகக்கூடும். செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை தனக்கு டாஸ்மாக் துறை மீண்டும் வேண்டாம் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவருக்கு வேறு ஒரு துறையை ஒதுக்கவும் தலைமை ஆலோசனை செய்துகொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தில் சீனியர்கள் சிலரின் துறை மாற்றம் இருக்கும்" என்றார்கள் உறுதியாக.



from India News https://ift.tt/c8x31Da

Post a Comment

0 Comments