செந்தில் பாலாஜி: விடாத ED; குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்த கோர்ட்; கிட்டுமா ஜாமீன்? | விசாரணை அப்டேட்

தொடர் விசாரணை!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், வழக்கு விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, குற்றச்சாட்டுப் பதிவுக்காகச் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தச் சொல்லியிருந்தார். அதேநேரத்தில், தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்தச் சூழலில் நீதிபதி அல்லி அமர்வு முன்பாக இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

பரபர விசாரணை!

விசாரணை சமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.பரணி்க்குமார், பிரபாகரன் ஆகியோர், "முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறோம். செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக இருப்பது, தலைமை நீதிபதி கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும். அதுவரை குற்றச்சாட்டுப் பதிவைத் தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனை எதிர்த்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், தனது தரப்பு வாதத்தைப் பதிவுசெய்திருந்தார்.

செந்தில் பாலாஜி

அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில், புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபடி காணொளிக் காட்சி வாயிலாகச் செந்தில் பாலாஜி நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரைப் பார்த்த நீதிபதி, "என்ன ஆச்சு?" என்று அருகிலிருந்த காவலரிடம் கேள்வியை முன்வைக்க, "வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது" என்று பதில் கூறினார். இதனைத் தொடர்ந்து 52-வது முறையாக ஆகஸ்ட் 7-ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் சிறைக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

ஜாமீன் கிடைக்குமா?

குற்றச்சாட்டுப் பதிவு விவகாரம் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் வட்டாரம், தி.மு.க வழக்கறிஞரணி வட்டாரத்தில் விசாரித்தோம். "செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் சிறைக்குள் மிகவும் மோசமடைந்துகொண்டே போகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதுகூட சிறை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தே ஆஜராகினார். இத்தனையும் நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அமைச்சரவையில் இருப்பதால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்றார்கள். தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார் அவர். எப்போதோ ஜாமீன் கிடைத்திருக்கவேண்டிய ஒரு வழக்கு இது. ஆனால், அமலாக்கத்துறை வேண்டுமென்றே திட்டமிட்டு வழக்கு விசாரணையை நீட்டித்துக்கொண்டே போகிறது.

செந்தில் பாலாஜி

கடந்த முறை, நீதிபதி அமலாக்கத்துறை வழக்கறிஞர்களைக் கடுமையாகப் பேசியதிலிருந்து புரிந்துகொள்ளலாம். மீண்டும் ஜாமீன் மனுமீதான விசாரணை வரும் திங்கள் (ஆகஸ்ட் 5-ம் தேதி) அன்று விசாரணைக்கு வருகிறது. கண்டிப்பாக அன்றைய தினம் ஜாமீன் கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இல்லை. பென்ட்ரைவில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஏதாவது இருந்தால்தானே அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். இல்லாத ஆவணத்தைப் புதிதாக உருவாக்கவும் முடியாது. இதனால் கண்டிப்பாகச் செந்தில் பாலாஜிக்கு விரைவிலேயே ஜாமீன் கிடைத்துவிடும்" என்றனர்.



from India News https://ift.tt/hxUCRPf

Post a Comment

0 Comments