ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கள்ளர் சீரமைப்பு துறை உருவாக்கப்பட்டு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 292 பள்ளிகள் \செயல்படுகின்றன. 1274 ஆசிரியர்களுடன் 26,376 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 56 மாணவர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க உள்ளதாக சொல்லப்பட, அப்போதிருந்தே தங்களுக்கான பள்ளிகள் தனித்துறையின் கீழ் எப்போதும் இயங்க வேண்டுமென்று பிறமலைக்கள்ளர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
சமீபத்தில் நீதிபதி சந்துரு அரசிடம் சமர்பித்த அறிக்கைக்குப்பின் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை, பல்ளிக்கல்வித்துறையில் இணைக்க அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறி மூன்று மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது. இந்நிலையில்தான் அரசை எதிர்த்து அதிமுக ஆகஸ்ட் 24-ல் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்க பரபரப்பானது மதுரை மண்டலம்.
முதலில் இதை பொருட்படுத்தாத தமிழக அரசு திடீரென 'கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் திட்டமே இல்லை' என மறுக்க, 'அரசு பொய் சொல்கிறது, போராட்டம் நடந்தே தீரும்' என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்க இதனால் பரபரத்து கிடக்கிறது மதுரை வட்டாரம்.
மதுரை அருகே செக்காணூரணியில் நடத்தவுள்ள பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். இந்த போராட்டத்துக்கு பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினரும், பிறமலைக்கள்ளர் அமைப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், "சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு, மக்கள் தொகையில் அதிகமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிறமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது. இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும். இப்பள்ளிகள் தனித்துவத்தோடு இயங்கி வரும் நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும், உள்நோக்கம் கொண்டதாகும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கு அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதல் படியாக இணை இயக்குநரின் தனித்துவமான கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு விடுதிகளை கள்ளர் சீரமைப்புத் துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதன் அதிகாரத்தை மழுங்கடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட விடியா அரசின் அரசாணை 40/2022- ஐ கைவிட வலியுறுத்தியும் 24 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்த நிலையில், திமுக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வுடன் அனைத்து சமுதாய அமைப்புகளும், தோழமைக் கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டமாக வலுப்பெறும் என்பதை உளவுத்துறை முலம் அறிந்ததால் வழக்கம்போல மாற்றி மாற்றிப் பேசி தன் நிர்வாக குளறுபடிகளை மறைக்க முயலும் திமுக அரசின் வித்தைகள் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. நாணய வெளியீட்டு விழாவை 'மத்திய அரசு நடத்தியது' என்று பச்சைப்பொய் பேசிவிட்டு, பொய் அம்பலப்பட்டுவிட்டதும் 'மத்திய அரசு கட்டுப்பாட்டில் நிகழ்ச்சியை மாநில அரசு தான் நடத்தியது' என மாற்றிப் பேசி சமாளிக்க முயன்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு வெளியிடும் வெற்று அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களும் அதிமுக-வும் நம்புவதாக இல்லை. விடியா திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளால் அச்சத்தில் உள்ளதாக கள்ளர் சமுதாய அமைப்பினரும் மக்களும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முறையிட்டதன் அடிப்படையிலேயே, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயங்களுள் ஒன்றான பிரமலைக் கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமாகத் திகழும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க விடியா திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் வரை அதிமுக-வின் போராட்டம் நிச்சயம் தொடரும்" என்று தெரிவித்துள்ளனர். இன்று அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/EBJ74Fh
0 Comments