பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
“பொட்டில் அறைந்ததுபோல விஷயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எடப்பாடியார். தன்னுடைய மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்யத் துடிக்கிறார் ஸ்டாலின். அவர் வெளிநாட்டுக்குச் செல்லும் நேரத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பா.ஜ.க காலில் விழுந்திருக்கிறார். எப்படித் தன் குடும்பம், தன் மக்களென்று சுயநலத்துடன் கருணாநிதி இருந்தாரோ, அதைவிட நூறு மடங்கு சுயநலம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை மத்திய பா.ஜ.க அரசை மிகக் கடுமையாகச் சாடினார்கள். மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அப்படியே பம்மி, பதுங்கினார்கள். இன்று, தன் மகன், மருமகன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும், தன் அமைச்சரவை சகாக்களை ஊழல் வழக்குகளிலிருந்து விடுவிக்கவும் பா.ஜ.க-வுடன் கொஞ்சிக் குலவுகிறார்கள். பா.ஜ.க கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலும் போதும்... அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் தி.மு.க தயங்காது. இவர்களின் வாய்ப்பந்தலெல்லாம் இன்று சரிந்து தொங்குகின்றன. பா.ஜ.க காலைப் பிடித்து குடும்ப அரசியல் செய்யும் தி.மு.க-வை 2026-ல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!”
சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“கண்ணைக் கட்டிக்கொண்டு காக்கா கதை சொல்கிறார் எடப்பாடி. தொடர் தோல்வியால் துவண்டுகிடக்கிறது அ.தி.மு.க. இமாலய ஊழல் புகாரில் சிக்கியிருப்பது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்தான் என்பதை நாடே அறியும். இதுவரை தி.மு.க-மீது ஒரு வழக்கு தொடர வக்கிருக்கிறதா... காரணம், அவர் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் போலியானவை. அப்படியே எங்கள்மீது வழக்கு பாய்ந்தாலும் அதைச் சட்டரீதியாகவே எதிர்கொண்டு வருகிறோம். முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அந்தக் கட்சித் தலைவரே ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டார். ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் காவடி தூக்கியதோடு, கட்சியையும் அடகுவைத்ததை அ.தி.மு.க தொண்டர்களே மறந்திருக்க மாட்டார்கள். கூட்டணியிலிருந்து வெளியே வந்தாலும், பா.ஜ.க-வை விமர்சிக்க வக்கற்றவர்கள் எங்களை விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க தலைவர்கள் தொடங்கி கடைக்கோடித் தொண்டர்கள் வரை பாசிச பா.ஜ.க-வின் அகோர முகத்தைத் தோலுரித்துவருகிறோம். யார் காலையும் பிடித்து சுயமரியாதையை இழந்து நிற்காது தி.மு.க. எடப்பாடியின் பேச்சு மூளை கெட்ட உளறல்... அவ்வளவுதான்!”
from India News https://ift.tt/q3BKTnD
0 Comments