'கார்த்தி சிதம்பரம் vs ஈவிகேஎஸ் இளங்கோவன்' - திகுதிகு சத்தியமூர்த்தி பவன்!

தேர்தலுக்கு முன்பு 'மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் இல்லை' என கார்த்தி கொடுத்த பேட்டி கதர்களை கடுப்பாக்கியது. அப்போது தலைமையில் இருந்து ஷோ கேஸ் நோட்டீஸ், சொந்த கட்சியினரின் போராட்டம் என அப்செட்டானார், கார்த்தி. வழக்கமான தனது டெல்லி லாபி மூலமாக இந்த பிரச்னையிலிருந்து வெளியில் வந்தார். நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் தி.மு.க-வினர் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். 'சிவகங்கையில் கார்த்திக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது' என அறிவாலயத்தில் ஓப்பனாக பேசினார்கள். அதனை கடந்து, தனது தந்தை மூலமாக சீட் வாங்கினார். எனினும் அமைதியான முறையில் தேர்தலை சந்தித்தார். பிறகு, 'கோட்டுக்கு அந்த பக்கம் நானும் வர மாட்டேன்.. நீங்களும் இந்த பக்கம் வரக்கூடாது' என்கிற மனநிலைக்கே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இந்த நிலையில் தான் சர்ச்சை வண்டியில் மீண்டும் ஏறியிருக்கிறார், கார்த்தி. கடந்த 19.7.2024 அன்று சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசியவர், "ரெளடிகள் மீது ஏன் போலீஸார் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? என்கவுன்ட்டர் என்பது ஏற்கமுடியாத ஒன்று. நீதிமன்றம்தான் தண்டனை வழங்க வேண்டும். உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடந்ததாகப் பலரும் சந்தேகப்படுகின்றனர். மின் கட்டன உயர்வு தேவையற்றது. மக்கள் மீது பாரத்தைச் சுமத்தியிருக்கக் கூடாது" என கொதித்தார்.

பிறகு 20.7.2024 அன்று சிவகங்கையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கார்த்தி, "ரூ.20,000 கோடிக்குக் கள்ளச்சாராயம் விற்பனையாகிறது. அது அதிகார வர்க்கத்துக்குத் தெரிந்து தான் நடக்கிறது. கூலிப்படை அதிகரித்துள்ளது. கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. வருகிற 2029-ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு முன் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்" என வெடித்திருந்தார்.

இதற்கு தி.மு.க-வில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. தேர்தலில் நாங்கள் தனி பெரும்பான்மை பெறுவோம். தனி ஆட்சி அமைப்போம். தோழமை கட்சிகளை அரவணைத்துச் செல்வோம். அவர்களுக்கு வேண்டியதைச் செய்வோம். அவர்களுக்கு வேண்டிய இடங்களைக் கொடுப்போம். எங்களது முதல்வர் ஸ்டாலின் ஆற்றியிருக்கும் சிறப்பான பணிக்குத் தனி பெரும்பான்மை கிடைக்கும். யாருடைய தயவில் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் எங்களுக்கு வராது" எனப் பேசினார். இதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன், "தி.மு.க தயவால் தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சி யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என தேர்தலுக்கு முன்பே கார்த்தி சிதம்பரம் கூறி இருக்கலாமே.. கார்த்தி சிதம்பரம் சுயநலத்துடன் பேசி வருகிறார். தி.மு.க வேலை செய்யாவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. கட்சி நலனை விட தேசத்தின் நலனே முக்கியம். எம்.பி ஆன பின் தி.மு.க-வுக்கு நெருக்கடியையும் இக்கட்டையும் ஏற்படுத்துவது போன்ற பேச்சு எந்த விதத்தில் நியாயம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களே அதிகம். தி.மு.க பெருந்தன்மையோடு செயல்பட்டு இருக்கிறது" என தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேச்சியில் கொதித்தார்.

பதிலுக்கு கார்த்தி, "நான் பேசியதை ஈவிகேஎஸ்.இளங்கோவன் முழுமையாக கேட்டாரா என்று தெரியவில்லை. கட்சி வளர வேண்டும் என்று நான் சொன்னதை நாட்டுக்கு கேடு என்று சொல்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா, தவறா என்பதை கட்சியினரிடம் கேளுங்கள். கூட்டணியால் தான் நான் வெற்றி பெற்றேன் என்று தான் கூறினேன். காங்கிரஸில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது வேடிக்கையாக உள்ளது. அவர் பேசியதற்கு நான் எதிர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.

கார்த்தி சிதம்பரம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், "இருவருமே கட்சியின் நலனுக்காக பேசவில்லை. கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் வேண்டும் என்றெல்லாம் கார்த்தி பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கார்த்தி இப்படி பேசியிருந்தால், சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். எனவேதான் அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது பேசி வருகிறார். இப்படியெல்லாம் பேசினால்தான் விரைவில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிடும்.

இதனால் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர் போன்ற பதவிகளை எதிர்பார்த்து இருக்கும் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அடிமட்டத்தில் இருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே கார்த்தி பேசுகிறார். இதேபோல் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதற்கு முழுக்க, முழுக்க தி.மு.கதான் காரணம். எனவே அந்த விசுவாசத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை விமர்சனம் செய்தால் உடனே அவர்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்கிறார். ஆகவே இருவருக்கும் கட்சியை வளர்ப்பதில் நோக்கம் இல்லை. தங்களின் சுயநலத்துக்காக பேசி வருகிறார்கள். இதையடுத்து இருவரையும் அமைதியாக இருக்க டெல்லி அறிவுறுத்திருக்கிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/Q6zir7G

Post a Comment

0 Comments