அமெரிக்க அதிபர் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை பற்றவைத்துக்கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்புக்கு ஆதரவு அலை வீசுவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்க ஆர்வம்காட்டிவரும் அதிபர் ஜோ பைடனுக்கு சொந்தக் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஆளும் ஜனநாயக் கட்சியும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி வேலைசெய்துவருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது, சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கு பொதுமக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கியிருக்கிறது. அதேசமயம், அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாத நிகழ்ச்சியில் ட்ரம்ப்பின் பேச்சுக்கு ஈடுகொடுத்து பேசமுடியாமல் ஜோ பைடன் திணறியது அவருக்கான மைலேஜை வெகுவாக கீழிறக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 81 வயதாகும் ஜோ பைடனின் முதுமை அவருக்கு மைனஸாக அமைந்திருப்பதாலும், ஏற்கெனவே ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக அங்கம் வகித்துவருவதாலும் பைடனுக்கான ஆதரவு கட்சிக்குள்ளாகவே குறைந்திருக்கிறது.
குறிப்பாக, ஜனநாய கட்சியின் முன்னாள் அதிபர் ஒபாமா, ``ஜோ பைடனின் வெற்றிவாய்ப்பு குறைந்துவிட்டது. அவரின் வெற்றி கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்'' என கட்சியினரிடையே பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், அமெரிக்க முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, ``ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்திருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தவிர, ஜனநாய கட்சியின் முக்கியத் தலைவர்கள் மோட்டனா செனட்டர் ஜோன் டெஸ்டர், கலிஃபோர்னியா ஹவுஸ் பிரதிநிதி ஜிம் கோஸ்டா உள்ளிட்டோரும் ஜோ பைடனை அதிபர் வேட்பாளர் ரேஸிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அதற்கேற்ப, ஜனநாயக கட்சி உறுப்பினர்களிடம் AP-NORC நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், `பெரும்பாலான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜோ பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலக வேண்டும் என நினைப்பதாக' தெரிவித்திருக்கிறது. அதேசமயம், ஜோ பைடனைவிட துணை அதிபராக இருக்கக்கூடிய கமலா ஹாரிஸ்தான் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட பொருத்தமானவராக இருப்பார் என்று ஜனநாயக கட்சியினர் விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறது. அதாவது, ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களில் 10-ல் 6 பேர் ஹமலா ஹாரிஸை தேர்ந்தெடுக்க ஆதரவளித்திருப்பதாக AP-NORC-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
அதேபோல, பொதுமக்களிடம் CNN நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் 47% பேர் ட்ரம்புக்கும், 45% பேர் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்பை வீழ்த்துவதற்கு ஜோ பைடனை விட தகுதிவாய்ந்த ஜனநாயக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்தான் என கட்சிக்குள்ளாகவே வலுவான குரல்கள் எழுந்திருக்கின்றன. அதற்கேற்ப, பிரசாரத்துக்கு செல்லமுடியாத வகையில் ஜோ பைடனும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், கட்சிக்குள்ளாக ஜோ பைடனுக்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்புக் குரலால் அதிருப்தி அடைந்திருக்கும் ஜோ பைன் குடும்பத்தினரும் அவரை அதிபர் வேட்பாளர் ரேஸிலிருந்து விலகிவிடுவது நல்லது என அறிவுறுத்திவருவதாக தெரிகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ரேஸிலிருந்து ஜோ பைடன் எந்நேரமும் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஜோ பைடன் விலகினால், கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் கமலா ஹாரிஸே ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது அவ்வளவு சுலமான காரியம் இல்லை என்றும் போட்டிக்கு பலர் வருவார்கள் என்றும் அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/JkyVLU7
0 Comments