நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் `நிலையான வளர்ச்சி இலக்குகள்' குறியீட்டு புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட 17 இலக்குகளில் தமிழ்நாடு மாநிலம் பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஒட்டுமொத்த மாநிலங்களையும் பொறுத்தவரையில் கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும், தேசிய சராசரியையை விட கூடுதல் புள்ளிகள் பெற்றும் முன்னணி வகிக்கிறது தமிழ்நாடு.
அதேசமயம் முக்கியமான சில இலக்குகளில் முந்தையை நிதி ஆயோக்கின் குறியீட்டு அறிக்கையை விட குறைவான புள்ளிகளைப் பெற்று பின்னடவையும் சந்தித்திருக்கிறது. இதில், முன்னிலையில் இருக்கும் இலக்குகளைக் குறிப்பிட்டு ஆளும் தி.மு.க அரசு பெருமைப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழ்நாடு பின்தங்கியுள்ள இலக்குகளை பெரிதுபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரக் குறியீட்டில் 9 ஆவது இடத்திலும், நிலையான நகரங்கள் மற்றும் சமூகக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்திக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், நிலத்தில் வாழ்க்கைக் குறியீட்டில் 15 ஆவது இடத்திலும், அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனக் குறியீட்டில், 9 ஆவது இடத்திலும் எனப் பல குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட மிகுந்த பின்னடவை சந்தித்துள்ளது.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதும், சுமார் 11% அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், தற்கொலைகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதும், புதிய கண்டுபிடிப்புத் திறன் 37.91% லிருந்து, பாதிக்கும் மேல், 15.69% ஆகக் குறைந்திருப்பதும், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவை தவிர, உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் குறைந்திருப்பதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மொழித் திறன் மற்றும் கணிதப் பாடத் திறன் குறைந்திருப்பதும், மிகுந்த கவலைக்குரியது.
பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது, தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரான போக்கு நிலவுவதைக் காட்டுகிறது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும், சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு, தமிழகம் முழுவதும் நடக்கும் கட்டுப்பாடற்ற மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையே, அடிப்படைக் காரணமாக இருப்பதை மிக எளிதாக உணர முடிகிறது. திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளாகவும் குறைபாடுகளாகவும் தமிழக பாஜக இதுவரை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிதி ஆயோக் அறிக்கை பிரதிபலித்துள்ளது. வழக்கம் போல் திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடாமல், மாநில நலனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்!" என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
உண்மை நிலவரம் என்ன?
உண்மையில், நிதி ஆயோக் தரவுகளின்படி பிற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் பெரும்பாலான இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, வறுமை ஒழிப்பில் 92 மதிப்பெண் பெற்று மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதேபோல, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட இலக்குகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. தரமான கல்வி இலக்கில் 76 புள்ளிகளுடன் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இப்படியாக, மொத்தமுள்ள 17 இலக்குகளில் 13 இலக்குகளில் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகிக்கிறது. இவையெல்லாம் தேசிய சராசரியை விட மிக அதிகம். குறிப்பாக, ஒட்டுமொத்த இந்தியாவின் தேசிய சராசரியை விட 11 இலக்குகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மேலும், தேசிய சராசரி மதிப்பெண் 71 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றிருக்கிறது. கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 78 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.
அதேசமயம், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு, 8-ம் வகுப்பு மாணவர்கள் கணிதம் மற்றும் மொழிப்பாடங்களில் அடையும் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பெண் விகிதம் உள்ளிட்டவற்றில் பின்னடைவை சந்தித்திருக்கிறது. மிக முக்கியமாக, பட்டியல் சமூகத்தினருக்கு(SC) எதிரான குற்றங்கள், பழங்குடி சமூகத்தினருக்கு(ST) எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான கண்டறியக்கூடிய குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போதல் விகிதம், தற்கொலை விகிதம், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், நகர்ப்புறங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தி அளவு, பாலைவனமாக்கல் பரப்பு விகிதம் உள்ளிட்டவை மிகுதியாக அதிகரித்திருக்கின்றன.
தி.மு.க விளக்கம்:
இந்தநிலையில் தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன், ``நிதி ஆயோக் வெளியிடும் தரவரிசைகளில் ஒன்றை திருத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் வெளியிடும் SDG - Index-ல் பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்கள் இரண்டையும் தனித்தனியாக பிரித்து வகைப்படுத்திக்கொள்ளவேண்டும். தமிழ்நாடு 8 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலம். இதை யூனியன் பிரதேசங்கள் போல உள்ள சிறிய மாநிலங்களுடன் ஒப்பிடுகிறார்கள். கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களெல்லாம் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் தமிழ்நாட்டை விட மிகச்சிறிய மாநிலங்கள். குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுடன்தான் தமிழ்நாட்டை ஒப்பிடவேண்டும். அப்படி ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ்நாடுதான் எல்லா துறைகளிலும் முதலிடத்தில் வரும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/JFmEMTh
0 Comments