சில மாநிலங்களில் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனமும், ஆளுநர்கள் பணியிட மாற்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் சபாநாயகர் ஹரிபாஹவு பாக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பா.ஜ.க மூத்த தலைவர்களான ஓபி மாத்தூர், மைசூர் முன்னாள் எம்.பி சி.எச்.விஜயசங்கர் உள்ளிட்ட 6 புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.
ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராகவும், ஜிஷ்ணு தேவ் வர்மா தெலங்கானா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர், ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார், சத்தீஸ்கரின் ஆளுநராக ராமன் தேகா, மேகாலயா ஆளுநராக சி.எச் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மணிப்பூர் ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழக ஆளுநர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு அதில் இடம்பெறவில்லை!
from India News https://ift.tt/W1alELg
0 Comments