“அ.தி.மு.க கரையான் போலக் கரைகிறது” என்ற அண்ணாமலையின் விமர்சனம்? - ஒன் பை டூ

சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“அண்ணாமலை ஓர் அரசியல் கோமாளி. அவருக்குத் தமிழக அரசியலும் வரலாறும் தெரியவே தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம், சொந்தக் கட்சியையும், தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களையும் நம்பவைத்துக் கழுத்தறுப்பது ஒன்றுதான். இவர் உண்மையிலேயே ஐ.பி.எஸ் படித்தாரா என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டே போகிறது. தன்னைப் பற்றி மீடியாக்களில் பேச வேண்டும் என்பதற்காக, அரைவேக்காடுத்தனமாக உளறுவதையே வேலையாக வைத்திருக்கிறார். வெறும் பொய்யை மட்டுமே பேசி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கொங்கு மண்டலத்தில், தான் வலுப்பெற வேண்டும் என்பதற்காக மன்னார்குடி மாஃபியா கும்பல் சொல்வதைக் கேட்டு நடக்கும் தலையாட்டி பொம்மையாகவே அண்ணாமலை மாறிவிட்டார். எடப்பாடியார் குறித்துக் காழ்ப்புணர்ச்சியில் பேசுவதற்கும் அதுதான் காரணம். அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவராக வந்த பிறகு அந்தக் கட்சியிலிருந்த மூத்த தலைவர்கள் பலரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, தன்னை மட்டுமே பிரதானப்படுத்தி வளர்த்துக்கொள்ளும் அண்ணாமலைக்கு அ.தி.மு.க குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுக்கக் கரைந்துகொண்டிருப்பது பா.ஜ.க என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது.”

ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்... அ.தி.மு.க கரையத் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க-வுக்கு, இடைத்தேர்தலில் போட்டியிடும் துணிச்சல்கூட இல்லாமல் போய்விட்டது. உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் வாக்கு சதவிகிதம் தெளிவாகச் சொல்கிறது. இந்த நிலையில், ‘இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க போட்டியிட்டால் மூன்றாவது, நான்காவது இடத்துக்குப் போய்விடுமோ...’ என்ற அச்சத்தில் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது அ.தி.மு.க. அதேபோல, தி.மு.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்து அவர்களின் வெற்றிக்கு அ.தி.மு.க வழிவகை செய்திருக்கிறது என்ற சந்தேகமும் மேலோங்குகிறது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில்கூட வெளிநடப்பு மட்டுமே செய்தது அ.தி.மு.க. ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால் நாம் வெற்றிபெற்றிருப்போம்’ என்று அ.தி.மு.க-வினரே பேசும் அளவுக்கு பா.ஜ.க-வின் வளர்ச்சி இருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தால் அ.தி.மு.க கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு அ.தி.மு.க-மீது இருந்த நம்பிக்கை முற்றிலுமாகப் போய்விட்டது. அ.தி.மு.க-வில் இருந்த தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை பலரும் இப்போது பா.ஜ.க-வை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.”



from India News https://ift.tt/nthj4Ba

Post a Comment

0 Comments