திருவள்ளூர்: `ஆக்கிரமிப்பு’ வீடுகள் அகற்றம் சர்ச்சை! - உண்மை பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் பொதுமக்களால் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த 54 வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி அரசாங்கம் இடித்து அகற்றியிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே இருக்கிறது எஸ்.வி.ஜி.புரம் கிராமம். கடந்த 2000-ம் ஆண்டு இந்த கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை பட்டியலின சமூகத்தினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பட்டா வழங்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளாகியும் ஒருசிலரைத் தவிர பெரும்பாலான பயனாளிகள் வீடு கட்டி குடியேறாமலேயே இருந்து வந்திருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூரில் ‘ஆக்கிரமிப்பு’ வீடுகள் அகற்றம் சர்ச்சை!

அதாவது அரசால் இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட பயனாளிகள் வீடுகட்டி குடியேறியிருக்க வேண்டும், அப்படியில்லை என்றால் அந்த நிலத்தை திரும்பப் பெற அரசுக்கு உரிமை உள்ளது என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியும் வீடு கட்டாமல் காலி மனையாக விட்டு வைத்திருந்ததால், மக்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த நிலத்தை திரும்பப் பெற முடிவு செய்த அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ``இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வைக்கப்பட்ட பலகையால் அதிர்ச்சியடைந்த பயனாளிகள் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் தொடங்கி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரையிலும் மனு கொடுத்து, சம்மந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து வீடுகட்டி குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரசு தரப்பு, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சாதகமான எந்தவித செய்தியும் வராத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதேசமயம், தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக மக்கள் கூறும் இடங்களில் அவசர அவசரமாக ஹாலோ பிளாக் கற்கள், சிமென்ட் ஷீட் கூரைகளை வைத்து புதிதாக வீடுகள் கட்டத் தொடங்கியிருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் இரண்டு மாதங்களுக்குள் முழு வீட்டையே கட்டி குடியேறியிருக்கின்றனர்.

திருவள்ளூரில் ‘ஆக்கிரமிப்பு’ வீடுகள் அகற்றம் சர்ச்சை!

இந்த நிலையில்தான்,அண்மையில் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீரென குவிக்கப்பட்டனர். காவல்துறையின் பாதுகாப்புடன், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும், கட்டிக்கொண்டிருந்த வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர். இதில் சுமார் 54 வீடுகள் பொதுமக்களின் கண் முன்பாகவே இடித்து அகற்றப்பட்டன. இதைப் பார்த்து மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைக்கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V. G புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்துமீறியிருக்கிறது காவல்துறை.

அண்ணாமலை

திருத்தணி யூனியன் பா.ஜ.க மண்டலத் தலைவர் வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு. கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. திமுக-வின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தவிவகாரம் குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் விளக்கம் கேட்டோம். ``சம்பந்தப்பட்ட நிலம், வருவாய்த்துறை பதிவேட்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமானது என்று இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடம் ஆதிதிராவிடருக்கு மட்டுமே உரித்தானது. அதை விற்கவோ வாங்கவோ கூட முடியாது. அப்படியிருக்கும்போது, ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடம் ஆதிதிராவிடர் இல்லாத மக்களுக்கு எந்த வகையில் சென்றிருக்கும்? தற்போது இந்த இடத்தில் வீடு கட்டியிருப்பவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சிறுபான்மையினராக இருக்கின்றனர். யாரும் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல; மேலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கெனவே சொந்தமாக வீடுகள் இருக்கின்றன.

திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர்

சட்டப்படி அவர்கள் அரசின் இலவச வீடு வாங்க விண்ணப்பிப்பதற்குகூட தகுதியில்லாதவர்கள். ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்பாகவே அரசாங்கத்தால் தங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருப்பதாக சில ஆவணங்களைக் காட்டுகின்றனர். உண்மையில், அரசாங்கத்தால் அப்படி வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதற்கான எந்த சான்றும் ஆவணங்களும் வருவாய்த்துறையிலோ, வட்டாட்சியர் அலுவகத்திலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ கூட இல்லை! முழுக்க ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சம்பந்தமான இடமாகவே இருக்கிறது. எனவேதான் அத்துமீறி கட்டப்பட்டிருக்கும் வீடுகள் இடித்து அகற்றப்பட்டிருக்கின்றன!" எனத் தெரிவித்தார்.



from India News https://ift.tt/TncitaD

Post a Comment

0 Comments