`வேடிக்கை பார்க்க முடியாது' அண்ணாமலை படத்தோடு ஆடு வெட்டிய வழக்கில் தமிழக அரசுக்கு குட்டு..!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதையொட்டி நடைபெற்ற வெற்றிக் கொண்டாடத்தில் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரியில் ஆட்டின் கழுத்தில் தமிழக பா.ஜ கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி, அந்த ஆட்டை நடுரோட்டில் வெட்டினர். இதை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப்பில் பரப்பினர்.

ஆடு வெட்டப்படுதல்

இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் ஒரு சிலர் மட்டுமே இதை கண்டித்திருந்தனர். இந்த அநாகரிக செயலை எதிர்த்து விகடன் இணையதளத்தில் 'வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது ஆட்டின் தலை அல்ல... அரசியல் நாகரிகத்தின் தலை!' என்று கண்டித்ததோடு வெ(ற்)றிக் கொண்டாட்டம்; வெட்டப்பட்ட ஆடுகள்... முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இதுதானா உங்கள் முற்போக்கு? என்ற தலைப்பில் நீண்டதொரு கட்டுரையை வெளியிட்டோம்.

அதன்பிறகு பா.ஜ.க பிரமுகரும் வழக்கறிஞருமான மோகன்தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "பொது இடத்தில் ஆடு வெட்டியது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தும் தமிழக அரசு எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, "இதுபோன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமல்லாது, இது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அரசியல் தலைவர்களின் புகைப்படத்தை அணிவித்து மக்கள் மத்தியில் விலங்குகளை வெட்டுவது உடனடியாக தடுக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, சாலையில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி வெட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கண்டித்ததோடு, இந்த செயலுக்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

விகடன் வெளியிட்ட கட்டுரையை படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.



from India News https://ift.tt/SIKW5wn

Post a Comment

0 Comments