டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 15-ம் தேதி ஐந்து நாள் பயணமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். ஆளுநர் தன்னுடைய மனைவி, பேரனுடன் டெல்லிக்குச் சென்றதால், தனிப்பட்ட பயணம் என்று முதலில் சொல்லப்பட்டது. பாஜக புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஆளுநர் யாரையும் சந்திக்கவில்லை. எனவே ஆளுநர் ரவி, பிரதமர் மோடி தொடங்கி பலரையும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. அதுபோலவே 16-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்தார் ரவி.
அடுத்ததாக ஜூலை 17-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். தொடர்ச்சியாக தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார். அமித் ஷாவைச் சந்தித்தபோது, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக விவாதித்தாகக் கூறப்பட்டது. துறைரீதியான சந்திப்பைத் தாண்டி ஆளுநரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதனால் இந்தச் சந்திப்பின் பின்னணியிலும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.
அடுத்தடுத்த சந்திப்பு!
2021-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்துக்கு முன்பாக நாகாலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து கணக்கெடுத்துக்கொண்டால், விரைவிலேயே ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆளுநராக ரவி பொறுப்பேற்றதிலிருந்தே ஆளுநர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடிப்பது மாநிலம் முழுவதும் அறிந்த ஒன்று. பிரதமரைச் சந்தித்த பிறகு ஆளுநர், தனது சமூக வலைதளப் பக்கத்தில்,`` தமிழக மக்களின் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை, வழிகாட்டுதல்களைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த ஆளுநர், ``தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சூழல், மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்காக அவருடன் சந்திப்பை மேற்கொண்டேன். தமிழக மக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்தும், மாநில மக்களின் நலன் குறித்தும் அவர் அதிக அக்கறைகொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார். அதேபோல, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தபோதும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவைச் சந்தித்த பிறகும் தன் வலைதளத்தில் பதிவுசெய்திருந்தார்.
பின்னணி என்ன?
ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசினோம். "டெல்லியில் ஆளுநர் - பிரதமர் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. விரைவிலேயே ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஒன்று, மத்திய அரசு அவரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும். அல்லது ரவிக்கு பதிலாக வேறு யாரையாவது மாற்ற வேண்டும். இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமே ஆளுநர் பதவியிலிருந்து தன்னை டெல்லிக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாக இருந்திருக்கிறது என்கிறார்கள். பாதுகாப்பு தொடர்பான பணியில்தான் ஆர்.என்.ரவி விருப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பான தனது கோரிக்கையைப் பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டிருக்கிறார். அதற்கு பிரதமர் அலுவலகம், `இன்னும் கொஞ்ச காலம் ஆளுநராக உங்கள் பதவியைத் தொடருங்கள். மற்றவற்றைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்று பதில் சொல்லி அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அமித் ஷாவைச் சந்தித்தபோதும், மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அவரும் பிரதமர் அலுவலகம் சொன்ன அதே பதிலையே ரவிக்குச் சொல்லியிருக்கிறாராம். தற்போதைய நிலையில், கேரளாவின் ஆளுநரை மாற்றிவிட்டு, அங்கு வேறொருவரை மாற்றும் திட்டமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ரவியைக் கேரளாவுக்கு மாற்றிவிட்டு, கேரள ஆளுநரைத் தமிழகத்துக்கு மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் ஆளுநர்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். அவற்றுக்கு ஆளுநர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்கள் விரிவாக!.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/szmOlVg
0 Comments