தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் ஜுலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து ஆளுங்கட்சியான தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் கட்சியின் விவசாய அணியில் மாநில பொறுப்பில் இருக்கிறார். அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் பணிக்குழுவை தி.மு.க அமைத்திருக்கிறது. அதில் முக்கிய அமைச்சர்கள் பலரும் இருக்கிறார்கள். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது சுமார் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் தைலாபுரத்தில் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அதில், சி.அன்புமணி வேட்பாளராக களமிறக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ம.க தனித்து களம் கண்டபோது விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி களம் இறக்கப்பட்டார். அப்போது அவர் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில்தான் மீண்டும் அன்புமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது" என தெரிவித்துள்ளார். இதையடுத்து தி.மு.க, பா.ம.க இடையேயான நேரடி போட்டியாக விக்கிரவாண்டி மாறியிருக்கிறது. மறுபக்கம் எடப்பாடி தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தமிழ்நாட்டில் வன்னியர்கள் அதிகம் கொண்ட தொகுதி, விக்கிரவாண்டிதான். 2019 பிறகு நடந்த இடைத்தேர்தலில் பா.ம.க ஆதரவுடன் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ் செல்வன் வெற்றி பெற்றார். பிறகு 2021-ம் ஆண்டு புகழேந்தி வெற்றிபெற்ற போது முத்தமிழ் செல்வன் தோற்றார். இந்த சூழலில்தான் இடைத்தேர்தல் நடக்கிறது. பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி தான் வெற்றி வாய்ப்பு அதிகம். ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்பது நிச்சயமாக சொல்லவும் முடியாது. இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
தற்போது நடைபெறும் தேர்தலில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும் கூட தி.மு.க கூட்டணி பலமாக இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் கூட விழுப்புரம் தொகுதியில் வரும் விக்கிரவாண்டி பகுதியில் தி.மு.க அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறது. எனவே பா.ம.க இரண்டாவது இடத்தை பிடிக்கும் சூழல் தான் இருக்கிறது. தொடர் தோல்வியால் அ.தி.மு.க போட்டியிட வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது. ஒருவேளை பா.ம.க-வுக்கு ஆதரவு கொடுக்க அ.தி.மு.க முடிவு செய்திருந்தால் கடும் போட்டி நிலவும். ஆனால் அப்போதும் தி.மு.க வெற்றிபெறவ்பே வாய்ப்பு அதிகம். பொதுவாக இடைத்தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்பதுதான் ராமதாஸ் கருத்து. ஆனால் வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் நடைபெறுவதால், வாக்கு வங்கியை விட்டுக்கொடுக்க கூடாது என தேர்தல் களம் காண்கிறார்கள்" என்றார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேசுகையில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் தொகுதி, தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக களம் கண்ட ரவிக்குமார் 4,77,033 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். 70,703 வாக்குகள் குறைவாக பெற்று அ.தி.மு.க வேட்பாளர் பாக்யராஜ் தோல்வியடைந்தார். பா.ம.க 1,81,822 வாக்குகளும், நா.த.க 57,242 வாக்குகளும் பெற்றிருந்தன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க 72,188, அ.தி.மு.க 65,825, பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்றிருந்தன. இந்த சூழலில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றிபெறும். தங்களது அதிகார பலம், பணம் பலம் என எல்லாவற்றையும் இறங்குவார்கள்.
ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என எடப்பாடி அறிவித்திருப்பது தவறான முடிவு. அவர் தனது அறிக்கையில், 'தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள்' என்பதால் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி அனைத்து பலத்தையும் பயன்படுத்தும் என்பதை அறியாதவர் எடப்பாடி இல்லை. 10 ஆண்டுகாலம் இவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் செய்தார்கள் என்பதும் அவருக்கு தெரியும். கூடவே முக்கிய பதவியையும் எடப்பாடி வைத்து இருந்தார். ஆனால் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு எடப்பாடி செயல்பட்டு இருக்க வேண்டும். மிக குறுகிய காலமே இருப்பதால் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஆனால் தொடர் தோல்விகளால் மீண்டும் கடும் விமர்சனம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பயந்துபோய் பின்வாங்கியிருக்கிறார், எடப்பாடி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் நா.த.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் வளர்ந்து வரும் சூழலில் எடப்பாடி தவறான முடிவை எடுத்திருக்கிறார். அதேநேரத்தில் பா.ஜ.க கூறியதால்தான் போட்டியில் இருந்து அதிமுக விலகியிருப்பதாக சொல்லும் தகவல் தவறானது. அவர்கள் சொன்னால் எடப்பாடி நிச்சயம் கேட்க மாட்டார். அதேநேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பா.ம.க வேட்பாளரை ஆதரிக்கிறோம் என அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அப்போது சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அதையும் எடப்பாடி செய்ய தவறிவிட்டார்" என்றார்.
ஒருபக்கம் தே.ஜ.கூட்டணியில் பாமக, சமூக ரீதியாக வாக்குகள் கிடைக்கும் என நம்பும் பலம் கொண்ட தொகுதியில் களமிறங்குகிறது. அதிமுக ரேஸில் இருந்து விலகி இருப்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் பாமக-வால் குறிவைக்க முடியும். கூடுதலாக வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தையும் இந்த தேர்தலில் கையில் எடுத்துள்ளது பாமக. ``வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு. திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்." என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வன்னியர் சமூக வாக்குகளையும் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் முழுமையாக குறிவைக்கிறது பாமக என்பது தெரிகிறது.
மறுபக்கம் திமுக கூட்டணி... நீண்ட காலமாக ஒரே அணியாக நீடிக்கும் கூட்டணி கட்சிகள் அவர்களுக்கு பலமாக உள்ளது. இதனால் களத்தில் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றுகிறார்கள். கூடுதலாக ஆளும் கட்சி என்ற பலம். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் மக்க|ளவைத் தொகுதிக்குள்ளாக வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 72,188 வாக்குகளையும், அ.தி.மு.க 65,825 வாக்குகளையும், பா.ம.க 32,198 வாக்குகளையும் பெற்றிருக்கிறது. இப்போது திமுக-வே நேரடியாக நிற்பதாலும், அமைச்சர்கள் படை களமிறக்கப்பட்டிருப்பதாலும் பெரிய அளவில் வாக்குகளை வேட்டையாட வேண்டும் என வேலை செய்கிறார்கள்.
மேலும் நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றபிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அவர்களும் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்த தேர்தலில் நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகளும் இரு கூட்டணிகளும் கருத்தில் கொண்டிருக்கும் என்கிறார்கள்.
இப்படியாக விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் தகிக்கும் களமாகவே இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/q8EwM0t
0 Comments